கிராமங்களின் வளர்ச்சியை மதிப்பிட பஞ்சாயத்து வளர்ச்சி குறியீடு - மத்திய அரசு அறிமுகம்


கிராமங்களின் வளர்ச்சியை மதிப்பிட பஞ்சாயத்து வளர்ச்சி குறியீடு - மத்திய அரசு அறிமுகம்
x

கிராமங்களின் வளர்ச்சியை மதிப்பிட ‘பஞ்சாயத்து வளர்ச்சி குறியீட்டு எண்’ முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

புதுடெல்லி,


மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரி கபில் மொரேஷ்வர் பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கிராமங்களின் வளர்ச்சியை மதிப்பிட 'பஞ்சாயத்து வளர்ச்சி குறியீட்டு எண்' என்ற புதிய முறையை மத்திய அரசு வகுத்துள்ளது. இதன்படி, நிலையான வளர்ச்சி இலக்குகளாக ஐ.நா. சபை அடையாளம் கண்ட சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர் உள்ளிட்ட 9 அம்சங்கள், ஒவ்வொரு கிராமத்திலும் எந்த அளவுக்கு இருக்கிறது என்ற அடிப்படையில், அந்த கிராமத்தின் வளர்ச்சி மதிப்பிடப்படும்.

ஒவ்வொரு கிராமத்துக்கும் மதிப்பெண் போடப்படும். மதிப்பெண் அடிப்படையில், 4 வகையான 'கிரேடு' வழங்கப்படும். 40 சதவீதத்துக்கு குறைவான மதிப்பெண் பெறும் கிராமங்கள் 'டி' கிரேடு என்றும், 40 முதல் 60 சதவீத மதிப்பெண்கள் பெறும் கிராமங்கள் 'சி' கிரேடு என்றும், 60 முதல் 75 சதவீத மதிப்பெண் பெறும் கிராமங்கள் 'பி' கிரேடு என்றும், 75 முதல் 90 சதவீத மதிப்பெண் பெறும் கிராமங்கள் 'ஏ' கிரேடு என்றும் வகைப்படுத்தப்படும்.

90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் கிராமங்கள் 'ஏ பிளஸ்' என்று வகைப்படுத்தப்படும். இந்த கிரேடு அடிப்படையில், சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு என்னென்ன வசதிகள் தேவை, அதை எப்படி மேம்படுத்துவது என்று ஆலோசித்து செயல் திட்டம் வகுக்கப்படும்.

முதலில், சோதனை அடிப்படையில், இந்த மதிப்பீட்டு முறை, மராட்டிய மாநிலத்தின் புனே, சங்க்லி, சதாரா, சோலாப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் பின்பற்றப்பட்டது. அதில், 70 சதவீத கிராமங்கள், 'சி' கிரேடில் இருப்பது தெரிய வந்தது. அதாவது, அவை பின்தங்கிய நிலையில் உள்ளன. நகரங்களில் உள்ள அனைத்து வசதிகளையும் கிராமங்களுக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story