பரந்தூர் விமான நிலைய விவகாரம்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ தகவல்
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ தகவல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் எதிர்ப்பு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் கிரி.ராஜன் கேள்வி எழுப்பினார். கேள்விக்கு மத்திய இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அந்த பதிலில், டிட்கோ மற்றும் தமிழக அரசு இட அனுமதி வழங்க கோரி விண்ணப்பம் தாக்கல் செய்திருப்பதாக கூறியுள்ளார். அந்த விண்ணப்பம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து மத்திய விமான போக்குவரத்து துறையின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டிட்கோ தாக்கல் செய்துள்ள இடம் அனுமதி விண்ணப்பத்தின் படி பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 4 ஆயிரத்து 791 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தேவையான இடம் கிடைத்த பிறகே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும். விமான நிலையத்திற்கான இடத்தை இறுதி செய்வது மாநில அரசின் கடமை என பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.