மூடநம்பிக்கையின் உச்சம்: பேய் விரட்டுவதாக 5 வயது மகளை அடித்துக்கொன்ற பெற்றோர் - அதிர்ச்சி சம்பவம்


மூடநம்பிக்கையின் உச்சம்: பேய் விரட்டுவதாக 5 வயது மகளை அடித்துக்கொன்ற பெற்றோர் - அதிர்ச்சி சம்பவம்
x

மகளுக்கு பேய் பிடித்துவிட்டதாக நினைத்த பெற்றோர் அதை விரட்டுவதாக மகளை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் சுபாஷ் நகரை சேர்ந்தவர் சித்தார்த் சிம்னி (வயது 45). இவரது மனைவி ரஞ்சனா (வயது 42). இந்த தம்பதிக்கு 16 மற்றும் 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

யூடியூப் சேனல் நடத்தி வரும் சித்தார்த் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கடந்த மாதம் தஹல்கட் பகுதியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலத்திற்கு (தர்கா) சென்றுள்ளார்.

அங்கு சென்றுவந்த பின்னர் 5 வயதான தனது 2-வது மகளின் நடவடிக்கைகள் மாறியதாக சித்தார்த் மூடநம்பிக்கை கொண்டுள்ளார். தனது 2-வது மகளுக்கு பேய் பிடித்துவிட்டதாக அவர் கருதியுள்ளார்.

மூடநம்பிக்கையின் மிகுதியில் சித்தார்த் தனது மனைவி ரஞ்சனா மற்றும் உறவினர் பிரியா (வயது 32) ஆகியோருடன் இணைந்து தனது 5 வயது மகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கருதி பேய் ஓட்டுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாந்திரீக செயலில் ஈடுபட்டுள்ளார்.

பேய் ஓட்டுவதாக நினைத்து மாந்தீரிகம், பூஜை செய்தபோது அந்த 5 வயது குழந்தையிடம் பெற்றோர் கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி பதில் அளிக்காமல் அழுதுகொண்டே இருந்ததால் சிறுமியை பெற்றோர் கடுமையாக அடித்துள்ளனர். சிறுமியின் கண்ணத்திலும், உடலிலும் கடுமையாக அடித்துள்ளனர். இதை வீடியோவும் எடுத்துள்ளனர்.

பெற்றோர் கடுமையாக அடித்ததில் சிறுமி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, தனது மகளை பெற்றோர் சனிக்கிழமை அதிகாலை இஸ்லாமிய வழிபாட்டு தலத்திற்கு (தர்கா) கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து குழந்தையை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு உடனடியாக அங்கிருந்து வேகவேகமாக சென்றுவிட்டனர்.

இவர்களின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த மருத்துவமனை காவலாளி அவர்கள் வந்த காரின் எண்ணை புகைப்படம் எடுத்துள்ளார்.

அதேவேளை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை நடத்தினர். ஆனால், பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து மருத்துமனைக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

மருத்துவமனை காவலாளி எடுத்த காரின் புகைப்படம், காரின் எண்ணை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், குழந்தையின் தந்தை சித்தார்த் சிம்னி, தாய் ரஞ்சனா மற்றும் அவரது உறவினர் பிரியா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மூடநம்பிக்கையில் பேய் ஓட்டுவதாக சிறுமியை பெற்றோர் கடுமையாக தாக்கும் வீடியோவையும் போலீசார் கைப்பற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story