அரசியல்வாதியாக தங்கள் குழந்தைகள் வர வேண்டுமென பெற்றோர் விரும்ப வேண்டும்: அரியானா மந்திரி பேச்சு
சமூக ஊடகம் மற்றும் நமோ செயலி வழியே தேச வளர்ச்சிக்கான ஆலோசனைகளை இளைஞர்கள் வழங்க வேண்டும் என்று அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.
சண்டிகார்,
அரியானாவின் உள்துறை மந்திரி அனில் விஜ், தேசிய வாக்காளர் தினத்தின் ஒரு பகுதியாக அம்பாலா கன்டோன்மென்ட் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நல்ல நிர்வாகத்திற்கு திறமை வாய்ந்த அரசியல்வாதிகள் முக்கியம். நல்ல தலைவர்களாலேயே நாடு விரைவான வளர்ச்சியை அடையும்.
அதனால், தங்களுடைய குழந்தைகள் டாக்டர்களாக, என்ஜினீயர்களாக அல்லது ஆடிட்டர்களாக வரவேண்டும் என பெற்றோர் விரும்புவதுடன், நல்ல அரசியல்வாதிகளை உருவாக்குவது பற்றியும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகம் மற்றும் நமோ செயலி வழியே தேச வளர்ச்சிக்கான ஆலோசனைகளை இளைஞர்கள் வழங்க வேண்டும் என்று அவர் அழைப்பும் விடுத்துள்ளார். ஜனநாயகத்தின் வலிமையான அடித்தளம் ஆக வாக்காளர்கள் உள்ளனர். அதில், அவர்கள் பங்காற்றுவது முக்கியம் வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.