நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; ராஜ்யசபை வருகிற ஏப்ரல் 3-ந்தேதி வரை ஒத்திவைப்பு


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; ராஜ்யசபை வருகிற ஏப்ரல் 3-ந்தேதி வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 29 March 2023 10:20 AM GMT (Updated: 29 March 2023 11:02 AM GMT)

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் ராஜ்யசபை வருகிற ஏப்ரல் 3-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் அவை நடவடிக்கைகள் இன்று 12-வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதேபோன்று, நாடாளுமன்ற மேலவையும், மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் மேலவை கூடியது. அப்போது அதானி விவகாரம் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இதில், வன பாதுகாப்பு திருத்த மசோதா, 2023 பற்றிய கூட்டு குழுவுக்கான நியமனம் பற்றிய தீர்மானம் அவையில் எடுத்து கொள்ளப்பட்டது, சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்தர் யாதவ் சார்பில், உறுப்பினர்களை நியமிப்பது பற்றிய தீர்மானம் கொண்டு வரப்பட்டதும், குரல் வாக்கெடுப்பு வழியே அது நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழலில், உறுப்பினர்கள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், அவை தலைவர் தன்கார் அவையை மீண்டும் ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதன்படி வருகிற திங்கட்கிழமை காலை 11 மணி வரை (ஏப்ரல் 3) ராஜ்யசபை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதற்கு முன், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் மக்களவை வருகிற ஏப்ரல் 3-ந்தேதி காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story