நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் தொழில் அதிபரின் கைப்பையை திருடியவர் கைது
விராஜ்பேட்டையில், நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் தொழில் அதிபரின் கைப்பையை திருடியவரை சம்பவம் நடந்த 2 மணி நேரத்திலேயே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பிடித்துள்ளனர்.
குடகு-
விராஜ்பேட்டையில், நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் தொழில் அதிபரின் கைப்பையை திருடியவரை சம்பவம் நடந்த 2 மணி நேரத்திலேயே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பிடித்துள்ளனர்.
நாட்டிய நிகழ்ச்சி
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை டவுனில் பரதநாட்டிய பயிற்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நடந்த நாட்டிய நிகழ்ச்சியில் 'காந்தாரா' திரைப்படத்தில் நடித்த சில நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். மேலும் இதில் பெண் தொழில் அதிபரான பூஜா என்பவரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை அவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவர் தனது ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, விலை உயர்ந்த செல்போன், பணம் உள்ளிட்டவை அடங்கிய கைப்பையை மேடையில் உள்ள மேஜை மீது வைத்திருந்தார்.
அதை அங்கிருந்தவர்கள் எடுத்து மேடைக்கு கீழ் முன்பகுதியில் உள்ள இருக்கை ஒன்றில் வைத்திருந்தனர். பின்னர் அங்கு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. அவற்றை முடித்துக் கொண்டு தொழில் அதிபர் பூஜா, இருக்கையில் வைக்கப்பட்டு இருந்த தனது கைப்பையை தேடினார். அப்போது அது அங்கிருந்து மாயமாகி இருந்தது தெரியவந்தது.
கைப்பை திருட்டு
யாரோ மர்ம நபர்கள் பூஜாவின் கைப்பையை திருடிச்சென்றுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர், பூஜாவியின் கைப்பையை திருடிச்சென்றது தெரியவந்தது. அதையடுத்து அந்த நபரின் உருவத்தை செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆட்டோக்களில் சென்று அவரை பல இடங்களில் தேடினர்.
அப்போது அந்த நபர் விராஜ்பேட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த நபரை பிடித்து அவர்கள் விராஜ்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். அதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு டவுன் பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்பதும், அவர் பூஜாவின் கைப்பையை திருடி இருந்ததும் தெரியவந்தது.
கைது
மேலும் அவர் பூஜாவின் கைப்பையில் இருந்து ரூ.2 ஆயிரத்தை மட்டும் எடுத்து செலவழித்து இருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பூஜாவின் கைப்பை மற்றும் அதில் இருந்த ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றையும் மீட்டனர். தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.