மும்பை விமான நிலையத்தில் இருந்து ரூ.1½ கோடி வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற பயணி கைது
மும்பை விமான நிலையத்தில் இருந்து ரூ.1½ கோடி வெளிநாட்டு பணம் கடத்த முயனற பயணியை கைது செய்தனர்.
மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பயணி ஒருவர் அட்டை பெட்டியுடன் துபாய் செல்ல வந்திருந்தார். இந்த அட்டை பெட்டியில் பழங்கள் இருப்பதாக கூறினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அட்டை பெட்டியை திறந்து பார்த்த போது பயணி கூறியப்படி பழங்கள் இருந்ததை கண்டனர்.
இருப்பினும் அட்டை பெட்டியின் பக்கவாட்டு பகுதி பெரிதாக இருப்பதை கண்ட அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர். அதில் கத்தை, கத்தையாக வெவ்வேறு நாடுகளை சேர்ந்த கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பறிமுதல் செய்தனர்.
இந்த கரன்சிகளின் இந்திய மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து வெளிநாட்டு கரன்சியை கடத்த முயன்ற பயணியை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பயணியை கைது செய்தனர். மேலும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.