நாடாளுமன்றத்தில் எதிரொலித்த 'பதான்' பட சர்ச்சை


நாடாளுமன்றத்தில் எதிரொலித்த பதான் பட சர்ச்சை
x

‘பதான்’ பட சர்ச்சை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அப்பிரச்சினையை தணிக்கை குழுவிடம் விட்டுவிடுமாறு பகுஜன் சமாஜ் எம்.பி. வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

நடிகர் ஷாருக்கான்-தீபிகா படுகோன் நடிப்பில் 'பதான்' இந்திப்படம் தயாராகி வருகிறது. அதன் ஒரு பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி உடையில் நடித்திருப்பதால், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இந்தநிலையில், நேற்று இப்பிரச்சினையை நாடாளுமன்ற மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி எழுப்பினார். அவர் பேசியதாவது:-

பதான் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலரும் கோரிக்கை விடுக்கிறார்கள். ஒரு உலமா வாரியத்தில் இருப்பவர்களும் கேட்கிறார்கள். இது ஒரு புதிய வழக்கமாகி விட்டது. சினிமாவுக்கு ஒப்புதல் அளிப்பதையோ, தடை விதிப்பதையோ தணிக்கை குழுவிடம் விட்டுவிட வேண்டும். யாரோ காவி உடை அணிவதால் ஆபத்துக்கு உள்ளாவதற்கு சனாதன தர்மம் பலவீனமானது அல்ல. அதுபோல், இஸ்லாமிய மதமும் பலவீனமானது அல்ல. எனவே, இத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த 2019-ம் ஆண்டு, கடற்கொள்ளை தடுப்பு மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நெடுங்கடலில் கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மட்டுமின்றி ஆயுள் தண்டனையும் விதிக்கும் வகையில், அதில் கடந்த கூட்டத்தொடரில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தநிலையில், நேற்று மக்களவையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

60-க்கு மேற்பட்ட பழமையான சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்தார். இவற்றில், 137 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ஒரு சட்டமும் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் (சுரங்கம்) சட்டம்-1885, தந்தி ஒயர் சட்டம்-1950 ஆகியவையும் ரத்து செய்யப்படும் சட்டங்களில் அடங்கும்.

மக்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கரத் கூறியதாவது:-

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் ஆலோசனை நடத்தியும், தேவைப்பட்டால், ஒழுங்குமுறை அமைப்புடன் ஆலோசனை நடத்தியும் மத்திய அரசு முடிவு எடுத்து வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு, வாராக்கடன்கள் ரூ.8 லட்சத்து 95 ஆயிரத்து 601 கோடியாக உயர்ந்தது. ஆனால் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 958 கோடியாக குறைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களவை கேள்வி நேரத்தில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை மந்திரி கிஷன் ரெட்டி கூறியதாவது:-

மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு, வடகிழக்கு மாநிலங்களில் அமைதியும், அரசியல் நிலைத்தன்மையும் நிலவுகிறது. தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய முன்வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 90 கோடி டன்னாக இருக்கும். அடுத்த நிதி ஆண்டில் 100 கோடி டன்னாக உயரும். 2024-2025 நிதி ஆண்டுக்குள், அனல் நிலக்கரி இறக்குமதியை நிறுத்த இந்தியா தயாராகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய உருக்குத்துறை மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா கூறியதாவது:-

இந்தியாவின் உருக்கு உற்பத்தி, ஆண்டுக்கு 12 கோடி டன்னாக உள்ளது. இதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிகமாக உருக்கு உற்பத்தி செய்யும் 2-வது நாடு, இந்தியாதான்.

2030-ம் ஆண்டுக்குள், உருக்கு உற்பத்தியை ஆண்டுக்கு 30 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story