மோடியின் விசுவாசியாக மாறிவிட்டார்: குலாம் நபி ஆசாத் மீது காங்கிரஸ் பாய்ச்சல்
பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாக குலாம் நபி ஆசாத் மாறி வருகிறார். அவர் பரிதாபத்திற்கு உரியவர் என்று ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய 5 தலைவர்களின் பெயர்களை அதானி பெயருடன் இணைத்து ராகுல் காந்தி சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டார். அதில், அதானியின் ஆங்கில பெயரில் ஒவ்வொரு எழுத்துடனும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரண் குமார் ரெட்டி, ஹிமந்த பிஸ்வா சர்மா, அனில் அந்தோணி ஆகிய 5 பேரை இணைத்து குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் குலாம் நபி ஆசாத் அளித்த பேட்டியில், "இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பின்னர் ராகுல் காந்திக்கு செல்வாக்கு அதிகரித்து விட்டது என பலர் கூறுகின்றனர். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி என்று எதுவும் இல்லை" என்று அவர் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவுக்கான பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும், தனது உண்மையான குணம் வெளிப்படும் வகையில் புதிய ஆழத்துக்கு செல்லும் குலாம் நபி ஆசாத், பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாக மாறி வருகிறார். அவர் பரிதாபத்திற்கு உரியவர் என்று மட்டுமே என்னால் கூறமுடியும்" என்றார்.