பத்ரா சால் முறைகேடு வழக்கு: சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் 5-ந் தேதி வரை நீட்டிப்பு
பத்ரா சால் முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் 5-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் 'பத்ரா சால்' என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கடந்த 1-ந் தேதி அதிகாலையில் அதிரடியாக கைது செய்தனர்.
முதலில் அமலாக்கத்துறை காவலில் ஒப்படைக்கப்பட்ட அவர் கடந்த 8-ந் தேதி நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டார். 14 நாட்கள் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை வருகிற 5-ந் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதனைதொடர்ந்து சஞ்சய் ராவத் சிறையில் அடைக்கப்பட்டார்.