வீர சாவர்க்கரை அவமதிப்பவர்களை குஜராத் மக்கள் ஏற்க மாட்டார்கள் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
வீர சாவர்க்கரை அவமதிப்பவர்களை குஜராத் மக்கள் ஏற்க மாட்டார்கள் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், வீரசாவர்க்கரை அவமதிப்பவர்களை குஜராத் மக்கள் ஏற்க மாட்டார்கள் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது இந்து பயங்கரவாதம் குறித்து பேசினார்கள். கடந்த 70 ஆண்டுகளில் சர்தார் வல்லபாய் படேலை நாடு மறக்கும்படி காங்கிரஸ் செய்தது. அம்பேத்கர் அங்கீகரிக்கப்படாமல் காங்கிரசால் அவமதிக்கப்பட்டார். வீர சாவர்க்கரை அவமதிப்பவர்களை குஜராத் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
பஞ்சாப் சுகாதார மந்திரி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டு 2 மாதங்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 3 மாதங்களில் 70 கொலைகள் அங்கு நடந்துள்ளது. மாநிலத்தில் அரசு இருக்கிறதா? என்பதே தெரியவில்லை.
டெல்லியை பொறுத்தவரை, அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயினுக்கு நேர்மைக்கான சான்றிதழை வழங்கினார். ஆனால் அவர் 5 மாதங்களாக சிறையில் இருக்கிறார். இவர்களின் கல்வி மந்திரி மதுபான வழக்கில் முதன்மை குற்றவாளி ஆவார். இவர்களை (ஆம் ஆத்மி) குஜராத் மக்கள் ஏற்பார்களா? ஒருபோதும் இல்லை.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தது என்பது மக்கள் அவர்களை நிராகரித்து உள்ளதை காட்டுகிறது.
ஆனால் இமாச்சல பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வராதது, காங்கிரசின் வியூகமா அல்லது அதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்ளதா? என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.