பெங்களூருவை புரட்டிப்போட்ட கனமழை: வடியாத வெள்ளத்தால் மக்கள் அவதி- நோய் பரவும் அபாயம்


பெங்களூருவை புரட்டிப்போட்ட கனமழை: வடியாத வெள்ளத்தால் மக்கள் அவதி- நோய் பரவும் அபாயம்
x

பெங்களூருவில் பெய்த கனமழையால் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. தற்போது வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் ஓயவில்லை. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெங்களூருவில் மாலை தொடங்கி விடிய, விடிய கனமழை கொட்டியது. இந்த கனமழை பெங்களூருவை புரட்டிப்போட்டது. இதனால் யமலூர், பெல்லந்தூர், எகோஸ்பேஸ் போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வெள்ளம் இதுவரையில் வடியவில்லை.

அந்த பகுதிகளில் உள்ள ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்றும் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

ராஜகால்வாய் ஆக்கிரமிப்பும், சரியான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததும்தான் மழை வெள்ளம் வடியாமல் இருப்பதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். எகோஸ்பேஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தளம் முழுவதையும் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

சுமார் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றிருந்தது. தற்போது அங்கு ஓரளவுக்கு வெள்ளம் வடிந்துள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகி உள்ளன. அவை அனைத்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த கார்கள் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

இதுபோல் மகாதேவபுரா சட்டமன்ற தொகுதி முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அங்கு மீட்பு பணிகளை பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் துரித கதியில் செய்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு குடிநீர் வினியோகம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் அங்குள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு மருந்து தெளிக்கும் பணியையும் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். மொத்தத்தில் பெங்களூருவில் மழை நின்றாலும் வெள்ளம் வடியாததால் தொடர்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி அவதி அடைந்து வருகிறார்கள்.


Next Story