பராமரிப்பு மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?; உரிமையாளர்கள், அதிகாரிகள் கருத்து


பராமரிப்பு மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?; உரிமையாளர்கள், அதிகாரிகள் கருத்து
x

பராமரிப்பு மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள், அதிகாரிகள், உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு:

இன்றைய நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருவதுடன் சாதனைகளையும் படைத்து வருகிறார்கள். திருமணமான தம்பதியில், முன்பு ஆண்கள் வேலைக்கு செல்வார்கள். பெண்கள் வீட்டை நிர்வகிப்பார்கள். ஆனால் இன்று பெருநகரங்களில் திருமணமான கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் தங்களது குழந்தைகளை டே கேர், பிளே ஸ்கூல் என்று அழைக்கப்படும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் சேர்த்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள்.

இதுபோன்ற குழந்தை பராமரிப்பு மையங்கள் பெங்களூரு, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தான் அதிகளவில் உள்ளன. இதற்கு கூட்டு குடும்பங்கள் என்ற வாழ்வியல் முறையை விட்டு இ்ன்றைய தலைமுறையினர் விலகி தனிக்குடித்தனத்தை தேர்வு செய்ததும், மற்றொன்று பொருளாதாரத்தை பெருக்க வேண்டும் என்று கணவன்-மனைவி வேலைக்கு செல்வதும் தான் காரணம் என்றால் மிகையல்ல. அதுதவிர சில நடுத்தர குடும்பத்தினரே, வீட்டில் குழந்தைகள் சேட்டை செய்வதாக கூறி, பராமரிப்பு மையங்களில் குழந்தைகளை சேர்க்கும் நிலையும் உள்ளது.

பெங்களூருவில் இதுபோன்ற குழந்தை பராமரிப்பு மையங்கள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. சுமார் 10 ஆயிரம் மையங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகளை கவனித்து கொள்ளுதல், பெற்றோர் வழங்கும் தின்பண்டங்கள், உணவை கொடுப்பது என்பது சிறிய அளவிலான பராமரிப்பு மையங்களில் நடைபெறுகிறது.

கொஞ்சம் வசதியான பராமரிப்பு மையங்களில், டி.வி. வசதி, விளையாட்டு பொருட்கள், பராமரிப்பில் சிறப்பு கவனம், அவர்களே தின்பண்டங்கள், உணவு பொருட்கள் தயாரித்து வழங்குவதும் உள்ளது. இவ்வாறு வசதிக்கு ஏற்ப சொகுசு பராமரிப்பு மையங்களும் பெங்களூருவில் உள்ளன.

இதில் பெரும்பாலான குழந்தை பராமரிப்பு மையங்கள் முறையான அனுமதி இல்லாமல் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டே கேர் மையங்கள் 2 ஆயிரம் சதுர அடி கொண்ட விசாலாமான அறையில் தான் செயல்பட வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பல பராமரிப்பு மையங்கள் குறுகிய இடத்திலேயே இயங்கி வருகின்றன. சில பராமரிப்பு மையங்களில் குழந்தைகளை ஒரு அறையில் அடைத்துவிடுவதாகவும், அவர்களை முறையாக கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுகிறது.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள ஒரு பராமரிப்பு மையத்தில் குழந்தைகளை ஒரு அறையில் தங்க வைத்துள்ளனர். அங்கு யாரும் இல்லை. குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது ஒரு குழந்தை, மற்றொரு குழந்தையை தொடர்ச்சியாக முகம், முதுகு என சரமாரியாக தாக்கியது. ஆனால் இதை அந்த பராமரிப்பு மையத்தினர் பார்க்கவில்லை. குழந்தையை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த பெற்றோர், குழந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அந்த பராமரிப்பு மையத்தினரிடம் கேள்வி எழுப்பினர். உங்களை நம்பி தானே இங்கே குழந்தையை விட்டு சென்றோம். எப்படி எங்கள் குழந்தையின் உடலில் காயம் வந்தது என்று உணர்வுப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதன்பிறகே பராமரிப்பு மையத்தினர், அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது தான், அந்த குழந்தையை மற்றொரு குழந்தை அடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து அந்த பெற்றோர் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சியுடன் பெங்களூரு மாநகர போலீசின் டுவிட்டர் பக்கத்தில் புகார் அளித்தனர். அவர்கள், இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த சுப்பிரமணியபுரா போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவத்தால் குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து குழந்தை பராமரிப்பு மையம் நடத்துபவர்கள், பெற்றோர்கள் என பல தரப்பட்டவர்களிடம் கருத்து கேட்டோம். அதன் விவரம் பின்வருமாறு:-

குழந்தைகளின் பாதுகாப்பு அவசியம்

சிவமொக்கா டவுன் கும்பார குந்தி பகுதியை சேர்ந்தவரும், தமிழ் பெண்கள் நல அமைப்பு நிர்வாகியுமான உமா மகேஷ்வரி கூறுகையில், வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்கள், வயது முதிர்ந்த பெற்றோர்களிடம் விட்டு செல்ல முடியாத நிலையில் குழந்தை பராமரிப்பு மையத்தில் விட்டு செல்கிறார்கள். முன்பு பெருநகரங்களில் மட்டுமே இருந்த இதுபோன்ற மையங்கள் சிறிய நகரங்களிலும் அதிகரித்து விட்டது.

இதுபோன்ற பராமரிப்பு மையங்களில் வயதான பெண்மணி இந்த குழந்தைகளை பார்த்துக் கொண்டு நேரத்தோடு உணவு, தண்ணீர் வழங்கி மாலையில் பெற்றவர்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள். இந்த பராமரிப்பு மையத்தை விட்டு வெளியே குழந்தைகள் செல்லாத வகையில் பாதுகாப்பது இவர்களுடைய முக்கியமான கடமை. ஆனால் சில பாதுகாப்பு மையங்களில் அழும் குழந்தைகள், அடம் பிடிக்கும் குழந்தைகளை அடிப்பதும், துன்புறுத்துவதும் நாம் அடிக்கடி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து படித்து தெரிந்து கொள்கிறோம். ஒரு சில பராமரிப்பு மையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. அதற்காக அனைத்து பராமரிப்பு மையங்களையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் இதுபோன்ற பராமரிப்பு மையங்கள் முறையாக அனுமதி பெற்று செயல்படுகிறதா? என்பது தெரியவில்லை. அதுபோல் அரசு விதிகளை கடைப்பிடித்து இந்த மையங்கள் செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. எப்படி இருந்தாலும் பராமரிப்பு மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், கண்காணிப்பையும், கூடுதல் கவனிப்பையும் மேற்கொள்வது பராமரிப்பு மையங்களை நடத்துவோரின் பொறுப்பு. அதுபோல் கல்வித்துறை அதிகாரிகளும், சமூகநலத்துறையினரும் அவ்வப்போது பராமரிப்பு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வித்துறை அனுமதி அவசியம்

பெங்களூரு ராஜாஜிநகரில் செயல்பட்டு வரும் ஜானவி குழந்தைகள் பராமரிப்பு மைய உரிமையாளர் ஷில்பா கூறியதாவது:-

குழந்தைகள் பராமரிப்பு மையம் நடத்துவதற்கு சமூக நலத்துறை, கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அவர்கள் வந்து ஆய்வு செய்வார்கள். சரியான அடிப்படை வசதிகள் இல்லையென்றால் குழந்தைகள் பராமரிப்பு மையம் நடந்த அனுமதி வழங்க மாட்டார்கள். குறிப்பாக ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையம் நடத்தவேண்டும் என்றால் 3 முதல் 4 படுக்கையறைகள் அளவு இடம் இருக்கவேண்டும். அதாவது 2 ஆயிரம் சதுர அடி அளவு இடம் இருக்க வேண்டும். அங்கு தனி கழிவறை, கண்காணிப்பு கேமரா, குழந்தைகளை தூங்க வைப்பதற்காக வசதி, பராமரிப்பாளர்கள் இருக்க வேண்டும்.

அதாவது கட்டாயம் ஒரு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஒருவர் (பராமரிப்பாளர் அல்லது உதவியாளர்) இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு எது நடந்தாலும் அவர்கள்தான் பொறுப்பு. தற்போது பல இடங்களில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், குழந்தைகள் பராமரிப்பு மையம் தொடங்கப்படுகிறது. அங்கு முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லை.

இதனை கல்வித்துறை அதிகாரிகள் மாதம் ஒரு முறை ஆய்வு செய்தால்போதும், அனுமதியின்றி செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு மையம் மூடப்பட்டுவிடும். பள்ளியுடன் சேர்ந்து செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், குழந்தைகள் மீது தாக்குதல் நடப்பது குறைவு. ஒரே அறையில் குழந்தைகளை அடைத்து வைக்க கூடாது. சுதந்திரமாக நடமாட விடவேண்டும். பெற்றோரை தவிர குழந்தைகளை வேறு யாருடனும் அனுப்ப கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் குழந்தைகள் மீதான தாக்குதல், குழந்தைகள் கடத்தலை தடுக்க முடியும். அதே நேரம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் எந்த தவறுகள் நடந்தாலும், அதற்கு அந்த பள்ளி நிர்வாகிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு இல்லை

பெங்களூருவில் பணியாற்றி வரும் கர்நாடக அரசு கல்வித்துறையின் தமிழ் வளமை அதிகாரி மெர்லின் கூறியதாவது:-

நகரங்களில் வீட்டில் கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு செல்கிறார்கள். அதனால் அவர்களின் குழந்தைகளை வீட்டில் கவனித்துக்கொள்ள யாரும் இருப்பது இல்லை. அதனால் அவர்கள் குழந்தையை குழந்தை பராமரிப்பு மையங்களில் விட்டு செல்கிறார்கள். மாலையில் வந்து குழந்தையை அழைத்து செல்வார்கள். அங்கு குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடையாது.

தொடர்ந்து அழும் குழந்தைகளை பராமரிப்பாளர்கள் அடித்து துன்புறுத்துவது உண்டு. அத்தகைய குழந்தைகளை ஏதாவது ஒரு தவறான மயக்கம் ஏற்படுத்தக்கூடிய உணவை கொடுத்து தூங்க வைக்கும் சம்பவங்களும் நடைபெறும். இத்தகைய விஷயங்கள் நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு நடைபெற்றது. ஆனால் தற்போது தொழில்நுட்பங்களின் வருகையால், பெற்றோர் எங்கிருந்தும் தங்களின் குழந்தைகளை கண்காணிக்க முடியும். குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் பெற்றோர் தங்களின் பணி இடத்தில் இருந்தபடியே குழந்தைகளின் செயல்பாடுகளை பார்த்துக்கொள்ளலாம். இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இவ்வாறு மெர்லின் கூறினார்.

சூழலுக்கு ஏற்றவாறு பராமரிப்பு

மங்களூரு நகரில் கத்ரி பகுதியில் பிளே ஸ்கூல் நடத்தி வரும் ஆசிரியை சேத்தனா கூறியதாவது:-

குழந்தைகளை வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தான் எங்களிடம் விட்டு செல்கிறார்கள். நாங்கள் அவர்களை கவனித்துக் கொள்வதுடன் பாட்டு, நடனம் சொல்லிகொடுக்கிறோம். மேலும் அவர்களுக்கு விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் வழங்குகிறோம். ஒரு சில பராமரிப்பு மையங்களில் நடைபெறும் தவறுகளை வைத்து பொத்தம் பொதுவாக குற்றம்சாட்ட கூடாது. அனைத்து குழந்தைகளையும் நாங்கள் காலை முதல் மாலை வரை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறோம். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை நாங்களே தயார் செய்து கொடுக்கிறோம். பெற்றோர்களும் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். தேவையான விளையாட்டு உபகரணங்களும் எங்கள் மையத்தில் உள்ளன. அவற்றை வைத்து குழந்தைகள் விளையாடுவார்கள். உறங்கும் நேரத்தில் உறங்க வைப்போம். கற்பிக்கும் நேரத்தில் கற்பிக்க வைப்போம். உடற்பயிற்சிகள் மனஅழுத்தமின்றி சூழலுக்கு உகந்தவாறு அந்த குழந்தைகளை பராமரித்து நாங்கள் தயார்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முறையாக செயல்பட நடவடிக்கை

மங்களூரு நகரில் கொட்டார சவுக்கியை சேர்ந்த குப்புசாமி கூறியதாவது:-

எனது மகனை குழந்தை பராமரிப்பு மையத்தில் சேர்த்துள்ளேன். அங்கு பாதுகாப்பு என்பது குறைபாடு இல்லை. தினமும் காலை 10 மணிக்கு மகனை பள்ளியில் விட்டால் மாலை வரை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். மதிய வேளையில் நாம் கொடுத்து அனுப்பும் உணவை உட்கொள்ள வைக்கிறார்கள். எந்தவிதமான புகார்களும் இதுவரை இல்லை. தங்கள் வீட்டு குழந்தைகளை போன்று கவனித்துக் கொள்கிறார்கள். அதுபோல் வீடு போன்றே குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களும் அங்குள்ளதால் அது விளையாட்டு பயிற்சியும் உடற்பயிற்சியுடன் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது இந்த மையத்தின் சிறப்பு அம்சமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எது, எப்படியோ குழந்தைகளை பராமரிப்பு மையத்தினர் பெயருக்கு ஏற்ப கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது அவர்களின் கடமை. பெருகிவரும் குழந்தை பராமரிப்பு மையங்களை கல்வித்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வதுடன், இதுபோன்ற குழந்தை மையங்கள் முறையாக செயல்படவும் நடவடிக்கை எடுப்பது கடமையாகும்.


Next Story