11,307 தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம்: மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி


11,307 தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம்: மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 4 March 2023 6:45 PM GMT (Updated: 4 March 2023 6:45 PM GMT)

தூய்மை பணியாளர்கள் 11,307 பேரை பணி நிரந்தரம் செய்ததால் கூடுதலாக தேவைப்படும் ரூ.70 கோடி நிதி அரசிடம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

தூய்மை பணியாளர்கள் 11,307 பேரை பணி நிரந்தரம் செய்ததால் கூடுதலாக தேவைப்படும் ரூ.70 கோடி நிதி அரசிடம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கூடுதலாக ரூ.70 கோடி

பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 15,383 தூய்மை பணியாளர்கள் பணியாற்றினார்கள். அவர்களில் 11,307 தூய்மை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 3,673 தூய்மை பணியாளர்களின் பணியையும் நிரந்தரம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் போது மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. இதற்காக ஆண்டுக்கு மாநகராட்சிக்கு ரூ.200 கோடி தேவையாக இருந்தது. தற்போது தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதால், அவர்களது சம்பளம் ரூ.28 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. இதனால் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.70 கோடி தேவையாக உள்ளது.

அரசிடம் கேட்க முடிவு

அதாவது 11,307 தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு சம்பளம் வழங்க கூடுதலாக ரூ.70 கோடி மாநகராட்சிக்கு தேவையாகும். இந்த நிதியை அரசிடம் இருந்து பெறுவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.70 கோடியை ஒதுக்கும்படி அரசுக்கு, கோரிக்கை வைத்து கடிதம் எழுதப்படும்.

அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை நான் சொல்ல இயலாது. 2023-24-ம் நிதி ஆண்டில் மாநகராட்சியின் வருவாயை பெருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பட்ஜெட்டில் அதுகுறித்து அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story