மராட்டிய மந்திரி மீது மஞ்சள் பொடி தூவிய நபர்; கோரிக்கையை வலியுறுத்தி நூதன போராட்டம்


மராட்டிய மந்திரி மீது மஞ்சள் பொடி தூவிய நபர்; கோரிக்கையை வலியுறுத்தி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 8 Sep 2023 8:07 AM GMT (Updated: 8 Sep 2023 8:10 AM GMT)

கோரிக்கை மனு அளித்த போது மந்திரியின் மீது மஞ்சள் பொடி தூவிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் வருவாய்த்துறை மந்திரி ராதாகிருஷ்ணா விகே பாட்டீல், இன்று சோலாபூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 'தங்கர்' என்ற சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேர் கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்களிடம் மந்திரி ராதாகிருஷ்ணா மனுவை வாங்கிய சமயத்தில், திடீரென ஒரு நபர் தன்னிடம் இருந்த மஞ்சள் பொடியை மந்திரியின் மேல் தூவி, கோஷம் எழுப்பத் தொடங்கினார். இதையடுத்து உடனடியாக மந்திரியின் ஆதரவாளர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மந்திரியின் மீது மஞ்சள் பொடியைத் தூவிய நபரின் பெயர் சேகர் பங்கலே என்பது தெரிய வந்துள்ளது. தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை முன்வைத்து வருவதாகவும், இது தொடர்பாக அரசின் கவனத்தைப் பெறவே மந்திரியின் மீது மஞ்சள் பொடியை தூவியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மந்திரி ராதாகிருஷ்ணா கூறுகையில், மஞ்சள் என்பது புனிதமான பொருளாக கருதப்படுவதால், இது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் நூதன முறையில் போராட்டம் நடத்திய நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story