கேரளா ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் உத்தரப்பிரதேசத்தில் கைது
கேரளாவில் ரெயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
லக்னோ,
கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே, இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் ஓடும் ரயிலில், ஒருவர் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
தீ பற்றி எரிவதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த செய்தனர். அதற்குள் பயத்தில், ரயிலில் இருந்து குதித்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், குற்றவாளியின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டு இருந்தது மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில், கேரளாவில் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
ஹாருக் சைபி என்பவரை உத்தரபிரதேசம் சென்று கைது செய்தது கேரள போலீஸ். உத்தரபிரதேச மாநிலம் புலந்தசஹர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.