விமான கண்காட்சியின் போது தீவிபத்தில் கார் எரிந்து நாசமானது; புதிய கார் வாங்க நிவாரணம் வழங்க கோரிய மனு தள்ளுபடி


விமான கண்காட்சியின் போது தீவிபத்தில் கார் எரிந்து நாசமானது; புதிய கார் வாங்க நிவாரணம் வழங்க கோரிய மனு தள்ளுபடி
x

விமான கண்காட்சியின் போது ஏற்பட்ட தீவிபத்தில் கார் எரிந்து நாசமானதால், புதிய கார் வாங்க நிவாரணம் கோரி தாக்கல் செய்த மனுவை பெங்களூரு நுகர்வோர் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கார் எரிந்து நாசமானது

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் ஆண்டுதோறும் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த விமான கண்காட்சியின் போது, அங்குள்ள மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் கண்காட்சியை பார்க்க வந்திருந்தவர்கள் நிறுத்திய கார்கள் எரிந்து நாசமானது. அதுபோல், பெங்களூருவை சேர்ந்த கவுதம் என்பவரின் காரும் தீவிபத்தில் எரிந்து நாசமாகி இருந்தது.

இந்த நிலையில், தீ விபத்தில் தனது கார் எரிந்து நாசமானதால், புதிய கார் வாங்குவதற்காக மத்திய பாதுகாப்பு படை மூலமாக நிவாரணம் பெற்று கொடுக்க வேணடும் என்று கோரி பெங்களூரு நுகர்வோர் கோர்ட்டில் கவுதம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி பீலகி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

பாதுகாப்பு படை பொறுப்பு இல்லை

இந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது விமான கண்காட்சி நடைபெற்ற பகுதியில் இந்திய விமானப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்தது. ஆனால் வாகன நிறுத்தும் இடத்திற்கான பாதுகாப்பை மாநில அரசு (கர்நாடகம்) செய்திருந்தது. எனவே மத்திய பாதுகாப்பு படை புதிய கார் வாங்க நிவாரணம் வழங்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு விமானப்படையும் பொறுப்பு ஏற்க முடியாது.

மனுதாரர் விமான கண்காட்சிக்கான டிக்கெட்டை கோர்ட்டில் வழங்கவில்லை. கார் தீ பிடித்தற்காக சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து அவருக்கு குறைந்த அளவு காப்பீடும் கிடைத்திருக்கிறது. அதன்மூலம் புதிய காரையும் வாங்கவில்லை. இதுபோன்ற தவறுகளையும், சில தகவல்களையும் மனுதாரர் மூடி மறைத்திருப்பதுடன், கோர்ட்டுக்கும் ஆவணங்களை வழங்கவில்லை. அதனால் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story