பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு: மத்திய அரசு


பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு: மத்திய அரசு
x

உற்பத்தி வரியை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்தது. இதனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசும் குறைக்கப் பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

Petrol price cut by Rs 9.50 per litre, diesel by Rs 7 as Centre slashes excise duty'உஜ்வாலா' திட்ட கியாஸ் சிலிண்டர்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

கடும் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்கிறபோதெல்லாம், அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் உயர்த்துகிறபோது அது பொதுமக்களுக்கு பெரும் சுமையாகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் ஒரே வாரத்தில்5 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.68, டீசல் ரூ.100.74 என்ற அளவுக்கு உயர்ந்தது.

இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தீபாவளி பரிசாக வரி குறைப்பு

பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கிற உற்பத்தி வரியும், மாநில அரசுகள் விதிக்கும் உள்ளூர் வரிகளும் (மதிப்பு கூட்டு வரி) பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

அதைத்தொடர்ந்து மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி, மக்களுக்கு தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் மீதான உற்பத்தி வரியை ரூ.10-ம் குறைத்தது.

மேலும் மாநில அரசுகளும் உள்ளூர் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி உத்தரகாண்ட்,கர்நாடகம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் என பா.ஜ.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுகிற பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான உள்ளூர் வரி குறைக்கப்பட்டது. எனவே அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்தது.

அதன்பின்னர் நீண்ட காலம் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்து வந்தது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை என்றுவிமர்சிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம்24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. இது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எரிபொருட்கள் வினியோக சங்கிலி பாதிப்புக்குள்ளானது.

137 நாட்களுக்கு பின்னர் விலை உயர்வு

இந்த நிலையில், 137 நாட்களுக்கு பின்னர் மார்ச் மாதம் 22-ந்தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரத்தொடங்கியது. இதன் தாக்கத்தால் சங்கிலித்தொடர் போல அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் காணத்தொடங்கின. காய்கறிகள் விலையும் உயர்ந்தது. இது சாமானிய மக்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி பிரதமர் மோடி, கொரோனா நிலைமை குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலிக்காட்சி வழியாக ஆலோசனை நடத்தியபோது, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி குறிப்பிட்டார்.

அப்போது அவர், "பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுமையை குறைப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அவற்றின் உற்பத்தி வரியை குறைத்தது. இதேபோன்று மாநிலங்களும் அவற்றின் மீதான உள்ளூர் வரியை குறைத்து அந்த பலன் மக்களுக்கு போய்ச்சேர உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோதும் சில மாநிலங்கள் (எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள்) அதற்கு செவி சாய்க்கவில்லை" என்று கருத்து தெரிவித்தார். "கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் மீதான உள்ளூர் வரியை குறைக்காத மாநிலங்கள் இப்போதாவது குறைக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மீண்டும் வரி குறைப்பு

இதற்கிடையே உக்ரைன் போரால் உற்பத்தி, வினியோக சங்கிலி பாதிப்பால் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மக்களை சிரமத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் மத்திய அரசு நேற்று அதிரடியாக மீண்டும் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை கணிசமாக குறைத்தது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.8 மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டது.

இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் விலை லிட்டருக்குரூ.7-ம் குறைந்துள்ளது.

இதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உஜ்வாலா கியாஸ் சிலிண்டர் மானியம்

ஏழைப்பெண்களுக்கான 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழான சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்குவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு வழங்கப்படும்.

இந்த மானியம் சுமார்9 கோடி பேருக்கு கிடைக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

இழப்பு எவ்வளவு?

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழான சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தால் ஆண்டுக்கு ரூ.6,100 கோடி செலவு பிடிக்கும்.

கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்தபோது, உள்ளூர் வரியை குறைக்காத மாநிலங்கள் இப்போது அவற்றை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story