எரிபொருளுக்கு பணம் கொடுப்பதில் தகராறு - பெட்ரோல் பங்க் தொழிலாளி அடித்துக் கொலை


எரிபொருளுக்கு பணம் கொடுப்பதில் தகராறு - பெட்ரோல் பங்க் தொழிலாளி அடித்துக் கொலை
x

பெட்ரோல் பங்க்கில் காரில் எரிபொருளை நிரப்பிய பிறகு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் தாக்கியதில் பெட்ரோல் பங்க் தொழிலாளி உயிரிழந்தார்.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று காரில் எரிபொருளை நிரப்பிய பிறகு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் தாக்கியதில் பெட்ரோல் பங்க் தொழிலாளி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக காரில் வந்த மூன்று பேர் நர்சிங்கியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்புவதற்காக சென்றனர். அப்போது பெட்ரோல் பங்க்கில் இருந்த தொழிலாளி பங்க்கை மூட இருப்பதாகவும் எரிபொருளுக்கான பணத்தை ரொக்கமாக கொடுக்கும்படியும் கூறியுள்ளார்.

ஆனால் எரிபொருளை நிரப்பிய பிறகு, அந்த மூவரும் எரிபொருளுக்கு ஆன்லைனில் பணம் செலுத்துவதாகக் கூறி, தொழிலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கினர். கடுமையாக காயமடைந்த தொழிலாளி கீழே சரிந்து விழுந்தார். இதையடுத்து மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து தொழிலாளி உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது குறித்து நர்சிங்கி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story