கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட சதி; பி.எப்.ஐ. அமைப்பினர் 14 பேர் கைது


கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட சதி; பி.எப்.ஐ. அமைப்பினர் 14 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

பெங்களூரு:

வன்முறையில் ஈடுபட சதி

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு பின்பு, பெங்களூரு உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது வன்முறையில் ஈடுபட சதி திட்டம் தீட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ேமலும் கடந்த 21-ந் தேதி கே.ஜி.ஹள்ளி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டார்கள். இதற்காக கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத், மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் பெங்களூரு, தட்சிண கன்னடா, மைசூரு, கொப்பல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பி.எப்.ஐ. அலுவலகங்கள் மற்றும் பிரமுகர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

14 பேர் கைது

இந்த சோதனையின் போது பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ேமலும் தட்சிண கன்னடா, உடுப்பி, கொப்பால், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். வெளி மாவட்டங்களில் கைதான 12 பேரும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார்கள். அவர்கள் அனைவரும், துணை போலீஸ் கமிஷனர் சரணப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதானவர்கள் வன்முறையை தூண்டி விடுவது, வன்முறையை அரங்கேற்றி, சமூக விரோத குற்றங்களில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கைதான நபர்களின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள், துண்டு பிரசுரங்கள், செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

5 பேர் தலைமறைவு

ஒட்டு மொத்தமாக 19 பேர் இந்த வன்முறை சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததாகவும், அவர்களில் 5 பேர் தலைமறைவாகி விட்டதாகவும், மற்ற 14 பேர் சிக்கி இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதான 14 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 7 பேர் சிக்கி இருந்தார்கள். தற்போது பெங்களூரு போலீசார் நடத்திய சோதனையில் 14 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.


Next Story