பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளை தடை செய்யும் பணிகளை தொடங்கிய மத்திய அரசு; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி


பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளை தடை செய்யும் பணிகளை தொடங்கிய மத்திய அரசு; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:46 PM GMT)

மத்திய அரசு, பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளை தடை செய்யும் பணிகளை தொடங்கியுள்ளதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.

பெங்களூரு:

போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பயங்கரவாத அமைப்புகள்

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளின் தலைவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது இந்த சோதனையில் தெரியவந்துள்ளது. அதனால் அந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

விசாரணை அமைப்புகள் சோதனை செய்யும்போது, சாதி, மதங்களை பார்ப்பது இல்லை. அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனை நடத்துகிறார்கள். சிலர் இந்த சோதனையை மதத்துடன் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. அந்த அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவர்களின் பின்னணியில் இருப்பது யார் என்பது உலகத்திற்கே தெரிய வேண்டும். இதை தூய்மைபடுத்த வேண்டுமென்றால் இத்தகைய சோதனைகளை நடத்துவது அவசியமானது.

அரசியல் பார்க்கக்கூடாது

இத்தகைய அமைப்புகளுக்கு தொடக்கம் முதல் காங்கிரஸ் ஆதரவு வழங்கியதால் தான் அந்த அமைப்புகள் என்று பெரிய அளவில் வளர்ந்துள்ளன. இத்தகைய அமைப்புகளை ஒடுக்க வேண்டுமென்றால் சாதி, மதம், அரசியல் பார்க்க கூடாது. இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.


Next Story