கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு: மறுவிசாரணை கோரிய பொதுநல மனு தள்ளுபடி - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு: மறுவிசாரணை கோரிய பொதுநல மனு தள்ளுபடி - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Sep 2023 6:45 PM GMT (Updated: 9 Sep 2023 6:46 PM GMT)

கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மறுவிசாரணை கோரிய பொதுநல மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளபடி செய்து உத்தரவிட்டது.

பெங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் கடந்த 2012-ம் ஆண்டு மங்களூரு அருகே உஜிரேயில் உள்ள கல்லூரியில் படித்து வந்த மாணவி கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முதலில் பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இவ்வழக்கு கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 6-ந்தேதி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில் உடுப்பி மாவட்டம் கார்கலாவை சேர்ந்த சந்தோஷ் ராவ் என்பவர் மாணவியை கற்பழித்து கொன்றதாக கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. கோர்ட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி சந்தோஷ் ராவை வழக்கில் இருந்து விடுதலை செய்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு கூறியது.

இந்த வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்த கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மறு விசாரணை கோரி பெங்களூரு சேஷாத்திரி புராவை சேர்ந்த சமூக ஆர்வலர் கிரீஷ் பரத்வாஜ், பெல்தங்கடியை சேர்ந்த ஜி.நவீன்குமார், புத்தூரை சேர்ந்த விநாயகர் நண்பர்கள் அறக்கட்டளையினர் ஆகியோர் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.பி.வரலே தலைமையிலான டிவிஷன் பெஞ்சு முன்பு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அருண் ஷியாம், 2012-ம் ஆண்டு மாணவி கற்பழித்து கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான ஆதாரம் இல்லை என கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. எனினும் மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது உண்மை. விசாரணை அதிகாரி மற்றும் மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர் ஆகியோரின் குளறுபடி காரணமாக குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும். சி.பி.ஐ., தேசிய புலனாய்வு அமைப்பு அல்லது சிறப்பு விசாரணை குழு மூலம் மீண்டும் விசாரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

ஆனால் நீதிபதிகள், இந்த வழக்கில் கொலையான மாணவியின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யவில்லை. நீங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவலாம். ஆனால் நீங்கள் பொதுநல மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை. சட்டவரம்புகளின் படி தான் மேல்முறையீடு மனுவை கையாள வேண்டும். எனவே மனுவை வாபஸ் பெற்று, சம்பந்தப்பட்டவர்கள் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தால் உரிய விசாரணை நடத்தப்படும் என்றனர்.

இதையடுத்து இந்த மனுவை வாபஸ் பெற மனுதாரர்கள் தரப்பு வக்கீல் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து ெபாதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் விரைவில் கொலையான மாணவியின் குடும்பத்தினர் கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வார்கள் என தெரிகிறது.


Next Story