குவிந்து கிடந்த குப்பைகள்: எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்; வைரலான வீடியோ
கர்நாடகாவில் குவிந்து கிடந்த குப்பைகளால் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
பெங்களூரு,
கர்நாடகாவில் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான பி.எஸ். எடியூரப்பா கலபுரகி நகருக்கு இன்று ஹெலிகாப்டர் ஒன்றில் வருகை தந்து உள்ளார்.
எனினும், அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது, அந்த பகுதியில் பிளாஸ்டிக் ஷீட்டுகள், காகிதங்கள், கவர்கள் உள்ளிட்ட குப்பைகள் குவிந்து கிடந்து உள்ளன. இதனால், ஹெலிகாப்டரின் வேகத்திற்கு அவை காற்றில் பறந்தன.
இதனால், அந்த பகுதியே தூசு மண்டலம் போன்று காட்சியளித்தது. தெளிவற்ற சூழல் காணப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. உடனே, வேறு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக ஹெலிகாப்டர் தரையிறங்காமல், அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
அதன்பின்பு அதிகாரிகள் அந்த பகுதியை தூய்மை செய்தனர். அதுவரை விமானி வானத்தில் பறந்தபடி இருந்து உள்ளார். இதன்பின், ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதனால், ஆபத்து எதுவும் ஏற்படாமல் எடியூரப்பா உயிர் தப்பினார். இதனால், சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.