"எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள், நாங்கள் பயப்படவில்லை" - மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கண்டனம்


எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள், நாங்கள் பயப்படவில்லை - மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கண்டனம்
x

Image Courtesy : ANI 

தினத்தந்தி 2 Jun 2022 8:37 AM GMT (Updated: 2 Jun 2022 8:40 AM GMT)

அனைவரையும் ஒரே நேரத்தில் சிறைக்கு அனுப்புங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

புதுடெல்லி,

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அதில், சுகாதார மந்திரியாக சத்யேந்தர் ஜெயின் பதவி வகித்து வருகிறார். உள்துறை, மின்சாரம், பொதுப்பணித்துறை, தொழில், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய முக்கிய இலாகாக்களையும் அவர் கவனித்து வருகிறார்.

கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் 'ஹவாலா' பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக சத்யேந்தர் ஜெயின் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கில் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.

இந்த நிலையில் அடுத்ததாக டெல்லி துணை முதல்வரை மத்திய அரசு கைது செய்யவுள்ளதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொளி வாயிலாக பேசினார். அப்போது அவர் மாநில சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக மத்திய அரசு போலி வழக்கை தயாரிக்க அனைத்து விசாரணை அமைப்புகளையும் கேட்டு கொண்டுள்ளதாகவும் மணீஷ் சிசோடியாவும் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், " மணீஷும் சத்யேந்தரும் ஊழல் செய்தார்கள் என்றால் யார் நேர்மையானவர்கள்? ஒவ்வொருவரையாக சிறையில் அனுப்பாமல் எங்கள் அனைவரையும் (அனைத்து மந்திரிகளையும்) ஒரே நேரத்தில் சிறைக்கு அனுப்புங்கள். அனைத்து விசாரணை அமைப்புகளையும் ஒரே நேரத்தில் அனைத்து விசாரணைகளையும் நடத்தச் சொல்லுங்கள். மந்திரிகளை ஒருவர் பின் ஒருவராக கைது செய்வது எங்கள் பணிக்கு இடையூறாக உள்ளது.

எங்களுக்கு அரசியல் புரியவில்லை. உங்களின் இந்த செயல் பஞ்சாப் தேர்தல் முடிவுகளின் பழிவாங்கல் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. காரணம் எதுவாக இருந்தாலும், கைது செய்யப்படுவதற்கு நாங்கள் பயப்படவில்லை. நாட்டின் நேர்மையான மற்றும் தேசப்பற்று கொண்ட கட்சி என்ற சான்றிதழை உங்களிடமிருந்து பெறுவோம் என்று நான் நம்புகிறேன்" என அவர் பேசினார்.


Next Story