பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட ஒத்துழைப்பு தாருங்கள்; பொதுமக்களுக்கு, போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்


பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட ஒத்துழைப்பு தாருங்கள்; பொதுமக்களுக்கு, போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்
x

பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

பெங்களூரு:

அமைதி கூட்டம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்திலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அனுமதிக்கும்படி சில அமைப்புகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. மேலும் சில இந்து அமைப்பினர் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவது குறித்து டவுன்ஹாலில் போலீசார், பொதுமக்கள் இடையே அமைதி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், கூடுதல் கமிஷனர் சந்தீப் பட்டீல் (மேற்கு), துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி (மேற்கு) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், பெஸ்காம் அதிகாரிகள், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பேசும்போது கூறியதாவது:-

இடையூறு செய்ய கூடாது

விநாயகர் சதுர்த்தி கொண்டாட எந்தவித கட்டுப்பாடும் இன்றி அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு விநாயகர் சதுா்த்தியின் போது அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு அப்படியே தொடரும்.

இதில் எந்த மாற்றமும் இல்லை. வீடுகள், கோவில்கள், பொது இடங்களில் மக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து பூஜைகள் செய்யும்போதோ, ஊர்வலமாக எடுத்து செல்லும் போதோ ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது. அந்த வாகனங்களில் இடையூறு இன்றி செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள்

பொதுமக்கள் யாருக்கும் தொந்தரவு ஏற்படுத்த கூடாது. விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். 30 முதல் 40 ஆண்டுகள் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருபவர்கள் விநாயகர் சிலைகளுக்கு தங்கநகைகள் அணிவிக்கிறார்கள். அந்த நகைகளை பாதுகாக்கும் வகையில் தான் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் தான் போலீசாரால் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியும். எல்லா இடங்களுக்கும் போலீசாரால் வர முடியாது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் இன்றி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story