ஏழைகளுக்கான வீடு திட்டம் ஏராளமானோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்


ஏழைகளுக்கான வீடு திட்டம் ஏராளமானோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
x

கோப்புப்படம்

ஏழைகளுக்கான வீடு திட்டத்தில் பலனடைந்த மதுரை பெண்ணின் கடிதத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இந்த திட்டம் எண்ணற்றோரின் வாழ்க்கையை மாற்றியிருப்பதாக தெரிவித்தார்.

புதுடெல்லி,

வீடற்ற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை (பிரதமர் ஆவாஸ் யோஜனா) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான ஏழைகள் பலனடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணும் இந்த திட்டத்தின் மூலம் வீடு பெற்றுள்ளார். இதற்காக பிரதமர் மோடியை பாராட்டி அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சுப்புலட்சுமி, இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவனின் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். சி.ஆர்.கேசவன் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தார்.

மனதை தொடும் கடிதம்

அப்போது, சுப்புலட்சுமி எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியிடம் சி.ஆர்.கேசவன் வழங்கினார். இதைப்பார்த்து பிரதமர் மோடி மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

இன்று நான் சி.ஆர்.கேசவனை சந்தித்தேன். அவர் தனது வீட்டில் சமையல் பணி செய்யும் சுப்புலட்சுமி எழுதிய மனதை தொடும் கடிதம் ஒன்றை என்னிடம் வழங்கினார்.

மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி, நிதிபிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உள்ளார். எனவே பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு பெறுவதற்காக வெற்றிகரமாக விண்ணப்பித்து பயனடைந்துள்ளார்.

பெண்களுக்கு அதிகாரம்

சுப்புலட்சுமி தனது கடிதத்தில், இந்த வீடு தனக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதையும், இது தனது வாழ்க்கையில் மரியாதை மற்றும் கண்ணியத்தையும் தருகிறது என்பதையும் பகிர்ந்துள்ளார். அவர் தனது வீட்டின் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு தனது நன்றியையும், ஆசிகளையும் தெரிவித்தார். இது போன்ற ஆசீர்வாதங்களே பெரும் பலத்திற்கு ஆதாரம்.

அவரைப்போல எண்ணற்ற மக்களின் வாழ்க்கை இந்த திட்டத்தால் மாறியுள்ளது. ஒரு வீடு அவர்களின் வாழ்க்கையில் ஒரு தரமான வேறுபாட்டைக் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் முன்னணியில் உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


Next Story