நாடாளுமன்றத்துக்கு வராததன் மூலம் 130 கோடி மக்களையும் பிரதமர் அவமதிக்கிறார்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு


நாடாளுமன்றத்துக்கு வராததன் மூலம் 130 கோடி மக்களையும் பிரதமர் அவமதிக்கிறார்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு
x

நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி வராதது, இரு அவைகளை மட்டுமின்றி, 130 கோடி மக்களையும் அவமதிக்கும் செயல் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.

புதுடெல்லி,

பதில் அளிக்க வேண்டியவர்

மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறியதாவது:-

மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதாக முதல்-மந்திரியே ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவதுதான் முதல் முன்னுரிமை பணியாக இருக்க வேண்டும். எத்தனை கற்பழிப்பு சம்பவங்கள் நடந்தன என்றே தெரியவில்லை.

அரசியல் சட்டத்தின் 75-வது பிரிவின்கீழ், பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு பதில் அளிக்க வேண்டியவர். அதனால், அவர் சபைக்கு வந்து பேச வேண்டும். உள்நாட்டில் இருந்து கொண்டே நாடாளுமன்றத்துக்கு வராததற்கு அவர் ஒரு காரணத்தை கூற முடியுமா?

அவமதிப்பு

பிரதமர், மக்களவையையும், மாநிலங்களவையையும் அவமதிப்பதை நிறுத்த வேண்டும்.

இரு அவைகளை மட்டுமின்றி, 130 கோடி மக்களையும் பிரதமர் மோடி அவமதித்து வருகிறார். அவர் எதை மறைக்க விரும்புகிறார்? அவர் மணிப்பூர் பற்றி நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

வெறும் 2 மணி நேரத்தில் என்ன விவாதம் நடத்த முடியும்? 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்று வந்துள்ளனர். அங்கு பார்த்ததை பேச விரும்புகின்றனர். எனவே, விரிவான விவாதம் நடத்த வேண்டும்.

காலவரையற்ற விவாதம்

ஒரே ஒரு திரவுபதிக்காக மகாபாரதம் நடந்தது. ஆனால் இங்கு எண்ணற்ற திரவுபதிகள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர். கார்கில் வீரரின் மனைவியும் மானபங்கம் செய்யப்பட்டுள்ளார்.

எல்லாம் அறிந்த பிரதமர், சபைக்கு வர வேண்டும். காலவரையின்றி விவாதம் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:-

இதுவரை 8 நாட்கள் நாடாளுமன்றம் நடந்தநிலையில், பிரதமர் மோடி 20 வினாடிகள் கூட சபைக்கு வந்தது இல்லை. அவர் எங்கே இருக்கிறார்?

மணிப்பூர் மிகவும் தீவிரமான பிரச்சினை. பிரதமர் ஏன் சபைக்கு வர முடியவில்லை? 2 மணி நேர விவாதம் போதாது. சிற்றுண்டி ரக விவாதம் தேவையில்லை. முழு சாப்பாடு விவாதம் தேவை.

கல் நெஞ்சம்

பிரதமர் மோடி, உங்களை யார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நேரு, வாஜ்பாய், மன்மோகன்சிங், ராஜீவ்காந்தி என அனைத்து பிரதமர்களும் சபைக்கு வந்து விவாதத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஆனால், மோடியோ ஆணவம் பிடித்தவராகவும், கல் நெஞ்சக்காரராகவும் இருக்கிறார். மணிப்பூரில் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விரிவான விவாதம் நடத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story