சமூக வலைத்தள கணக்குகளில் 'மோடியின் குடும்பம்' என்பதை நீக்கி விடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்


சமூக வலைத்தள கணக்குகளில் மோடியின் குடும்பம் என்பதை நீக்கி விடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Jun 2024 5:30 AM IST (Updated: 12 Jun 2024 5:30 AM IST)
t-max-icont-min-icon

இந்திய மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3-வது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என விமர்சித்தார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஒட்டு மொத்த இந்திய மக்களும் தனது குடும்பம் என மோடி பதிலடி கொடுத்தார். இதை ஆதரிக்கும் விதமாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்களும், மோடியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களை 'மோடி கா பரிவார்' (மோடியின் குடும்பம்) என்று அடையாளப்படுத்தினர்.

இந்த நிலையில் சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து 'மோடியின் குடும்பம்' என்பதை நீக்குமாறு பா.ஜனதாவினர் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தேர்தல் பிரசாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் என் மீதான பாசத்தின் அடையாளமாக தனது பெயருக்கு பின் 'மோடியின் குடும்பம்' சேர்த்தனர். நான் அதிலிருந்து நிறைய பலம் பெற்றேன்.

இந்திய மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3-வது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இது ஒரு சாதனையாகும். மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை அவர்கள் நமக்கு வழங்கியுள்ளனர். நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் உங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து 'மோடியின் குடும்பம்' என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெயர்கள் மாறலாம். ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நம் ஒரே குடும்பம் என்ற உறவு எப்போதும் வலிமையாகவும், உடைக்கப்படாமலும் இருக்கும்.

இவ்வாறு மோடி கூறியுள்ளார்.


Related Tags :
Next Story