வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
x

கோப்புப்படம் 

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன் (வயது 98). அவர் வயது முதிர்வால் சென்னையில் இன்று காலமானார். பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும், எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மக்களுக்கும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நமது தேசத்தின் வரலாற்றில் மிக நெருக்கடியான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர் செய்த திருப்புமுனையான பணி மில்லியன்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. நமது தேசத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது.

விவசாயத்தில் அவர் ஆற்றிய புரட்சிகரப் பங்களிப்புகளை தாண்டி, டாக்டர் சுவாமிநாதன் புதுமையின் ஆற்றல் மையமாகவும், பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எண்ணற்ற விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளது.

டாக்டர் சுவாமிநாதனுடனான எனது உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். இந்தியா முன்னேற்றம் காண வேண்டும் என்ற அவரது ஆர்வம் முன்மாதிரியாக இருந்தது. அவரது வாழ்க்கையும் பணியும் வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று தெரிவித்து உள்ளார்.


1 More update

Next Story