கோவாவில் ஓ.என்.ஜி.சி. கடல் வாழ் உயிரின மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி


கோவாவில் ஓ.என்.ஜி.சி. கடல் வாழ் உயிரின மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 6 Feb 2024 7:10 AM GMT (Updated: 6 Feb 2024 7:52 AM GMT)

கோவாவில் ரூ.1,330 கோடி மதிப்பிலான பொதுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

பனாஜீ,

ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று காலை கோவா வந்தார். அங்கு அவர் ஓ.என்.ஜி.சி. கடல்வாழ் உயிரின மையத்தை தொடங்கி வைத்தார். ஓ.என்.ஜி.சி. கடல்வாழ் உயிரின மையம், உலகத் தரத்திலான பயிற்சி மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் 10,000 முதல் 15,000 பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, கோவாவில் இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 17 எரிசக்தித்துறை அமைச்சர்கள், 35,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 900-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் மோடி இன்று பிற்பகலில் வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

கோவாவில் ரூ.1,330 கோடி மதிப்பிலான பொதுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். கோவாவின் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் நிரந்தர வளாகத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார்.

தேசிய நீர் விளையாட்டுக் கழகத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பனாஜி மற்றும் ரெய்ஸ் மாகோஸை இணைக்கும் சுற்றுலா பயணிகள் ரோப்வே திட்டத்திற்கும், தெற்கு கோவாவில் 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், ரோஸ்கர் மேளாவின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாக அரசு ஆள்சேர்ப்பு செய்யப்பட்ட 1,930 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்குகிறார்.


Next Story