3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி..!


3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி..!
x

பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று இரவு டெல்லி வந்தடைந்தார்.

புதுடெல்லி,

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் ஜூலை 13, 14-ம் தேதிகளில் 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றார். அங்கு நடைபெற்ற பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடிபங்கேற்றார். இந்த அணிவகுப்பு விழாவில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

பிரான்ஸ் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்தினர். தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. மேலும், பிரான்ஸ் நாட்டின் செனட் மற்றும் பார்லிமெண்ட் தலைவர்களை அவர் சந்தித்தார். பிரான்சில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக அளித்தார். அதிபரின் மனைவி, அந்நாட்டு பாராளுமன்ற தலைவர், செனட் தலைவருக்கும் அவர் பரிசளித்தார்.

பிரான்சில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று சென்றார். அந்நாட்டு பட்டத்து இளவரசர் ஷேக் காலித், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். இதையடுத்து துபாயில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் தலைவர் சுல்தான் அல் ஜாபரை சந்தித்து பேசினார். தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் நஹ்யானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் ஐக்கிய அரபு அமீரக ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்.

இந்நிலையில் பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று இரவு டெல்லி வந்தடைந்தார்.


Next Story