' பி.எம். விஸ்வகர்மா' திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி 'பி.எம். விஸ்வகர்மா' திட்டத்தை தொடங்கி வைத்தார் .
டெல்லி,
டெல்லியின் துவாரகாவில் யசோ பூமி என பெயரிடப்பட்டுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இன்று விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு 'பி.எம். விஸ்வகர்மா' திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது,
கைவினை கலைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனாளிகளை அங்கீகரிப்பது காலத்தின் கட்டாயம் என்று கூறினார்.
பின்னர் பி.எம். விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் இணையும் பயனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இதில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.500 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தொழில் நுட்பம் சார்ந்த கருவிகள் வாங்க ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் இந்த திட்டம் மூலம் முதலில் ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லாமலும் பின்னர் இரண்டாவதாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும். இந்த திட்டமானது ஐந்து ஆண்டுகளுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2023 முதல் 2028 வரை செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உட்பட 18 வகையான பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் அவர்களின் சுமார் 30 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள், என்று அவர் கூறினார்.
இத்திட்டம் மூலம் பாரம்பரிய கைவினைஞர்களால் வழங்கப்படும் பொருட்கள் சேவைகளின் அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதே குறிக்கோள் ஆகும்.