டெல்லி வெள்ளபாதிப்பு நிலவரம் குறித்து துணைநிலை கவர்னரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி


டெல்லி வெள்ளபாதிப்பு நிலவரம் குறித்து துணைநிலை கவர்னரிடம்  கேட்டறிந்தார் பிரதமர் மோடி
x

டெல்லி வெள்ளபாதிப்பு நிலவரம் குறித்து துணைநிலை கவர்னர் சக்சேனாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

புதுடெல்லி,

இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் நீர் மட்டம் இன்னும் அபாய அளவிலேயே உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளுக்கு உதவவும் 4500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். பலரும் உணவுகள் இன்றி பசியில் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு சில தன்னார்வ அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் உணவுகளை வழங்கி உதவி வருகின்றனர்.

தற்போது மழை குறைந்துள்ளதால் யமுனை நதியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 24 மணி நேரத்தில் டெல்லி இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் மேலும் கனமழைக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் தொடர் மழை பெய்தால் டெல்லியின் நிலைமை மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பியநிலையில், துணைநிலை கவர்னர் சக்சேனாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது டெல்லி வெள்ள நிலவரம் குறித்தும், அபாயம் நிலைமையைத் தணிப்பதற்கான முயற்சிகளின் முன்னேற்றம் குறித்தும், மத்திய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்போடு டெல்லி மக்களின் நலன் கருதி சாத்தியமான அனைத்து வேலைகளையும் செய்ய சக்சேனாவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story