இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமம்; பிரதமர் மோடி இன்று அறிவிப்பு
குஜராத்தில் உள்ள மொதேரா கிராமத்தை இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் மோடி இன்று அறிவிக்கிறார்.
அகமதாபாத்,
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவிக்கிறார்.
இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27 இல் சாலுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது.
இது தொடர்பாக குஜராத் அரசு வெளியிட்ட பதிவில், மொதேரா கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த கிராம மக்களுக்கு இலவசமாக சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படும்.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை மனதில் வைத்து, குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிலையான முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்துள்ளது.
தொல்லியல் துறையால் பாதுக்காப்படும் மொதேராவில் உள்ள சூரிய கோவிலுக்கு 3-டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் இந்த 3-டி திட்டத்தை பிரதமர் மோடி இன்று அர்ப்பணிக்கிறார். இதன் மூலம் சூரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதன் வரலாற்றை அறிய உதவும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவில் வளாகத்தில் பாரம்பரிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. விளக்குகள் ஏற்றப்படுவதை பார்த்து, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்லலாம். 3-டி தொழில்நுட்பம் தினமும் மாலையில் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.