கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்துக்கான 'விஸ்வகர்மா' திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்


கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்துக்கான விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 16 Sept 2023 5:45 AM IST (Updated: 16 Sept 2023 5:46 AM IST)
t-max-icont-min-icon

இந்த திட்டத்தை விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர் தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

பாரம்பரிய கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்துக்காக 'பி.எம். விஸ்வகர்மா' என்ற பெயரில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கடந்த மாதம் டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின உரையின்போது குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் பிறந்த தினமும் நாளை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரம்பரிய கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நிதி ரீதியாக உதவுவது மட்டுமின்றி, பழங்கால பாரம்பரியம், கலாசாரம் மற்றும் பன்முகப் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் பிரதமர் மோடியின் கவனம் உள்ளது.

மேலும் உள்ளூர் தயாரிப்புகள், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப்புக்கு ஆதரவு அளிப்பதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக சுதந்திர தினத்தன்று அறிவிக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டத்துக்கான மொத்த செலவினம் ரூ.13 ஆயிரம் கோடியையும் மத்திய அரசே வழங்கும்.

இந்த திட்டம், 'குரு-சிஷ்யன்' நடைமுறை அல்லது பாரம்பரிய திறன்களின் குடும்ப தொழில் நடைமுறையை வலுப்படுத்தி வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதுடன், அவர்கள் உள்நாடு மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதே திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இத்திட்டத்துக்கான பயனாளிகள் பயோமெட்ரிக் அடிப்படையிலான பிரதமர் விஸ்வகர்மா இணையதளத்தைப் பயன்படுத்தி பொது சேவை மையங்கள் மூலம் இலவசமாகப் பதிவு செய்யப்படுவார்கள்.

இந்த திட்ட பயனாளிகளுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, மேம்பட்ட பயிற்சியை உள்ளடக்கிய திறன் மேம்பாடு, ரூ.15,000 கருவித்தொகுப்பு ஊக்கத்தொகை, 5 சதவீத சலுகை வட்டி விகிதத்தில் ரு.2 லட்சம் வரை கடன் என பல்வேறு பலன்கள் வழங்கப்படும். மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்குவிப் பு மற்றும் சந்தைப்படுத்தலுக்கான உதவிகளும் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும்.

இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தச்சர்கள், படகு தயாரிப்பாளர்கள், கொல்லர்கள், சுத்தியல் மற்றும் கருவி தயாரிப்பாளர்கள், பூட்டுக்காரர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள், கல் உடைப்பவர்கள், செருப்பு, கூடை-பாய்-துடைப்பம் தயாரிப்பவர்கள், பொம்மை தயாரிப்பாளர்கள், முடி திருத்துபவர்கள், மாலை தயாரிப்பாளர்கள், துணி துவைப்பவர்கள், தையல்காரர்கள் மற்றும் மீன்பிடி வலை தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 18 வகை தொழில் செய்பவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிகிறது.

1 More update

Next Story