இந்தியாவில் எத்தனை புலிகள் உள்ளன? - கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட்ட பிரதமர் மோடி


தினத்தந்தி 9 April 2023 1:40 PM IST (Updated: 9 April 2023 1:40 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

மைசூரு,

பிரதமர் மோடி இன்று கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்தை பார்வையிட்டார். புலிகள் சரணாலயத்தில் 20 கிலோமீட்டர் வனப்பகுதிக்குள் சென்ற பிரதமர் மோடி புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை பார்வையிட்டார்.

பின்னர், பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்தில் இருந்து சாலை மார்கமாக காரில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு வந்தடைந்தார். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்த பிரதமர் மோடி யானைகளுக்கு உணவு அளித்தார்.

முதுமலை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மீண்டும் மைசூரு சென்றார். அங்கு பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு எண்ணிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

நாட்டில் உள்ள புலிகளை பாதுகாக்க புலிகள் திட்டம் (Project Tiger) என்ற பெயரில் தொடக்கப்பட்ட திட்டம் 50-ம் ஆண்டை எட்டியுள்ள நிலையில் நாட்டில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 3 ஆயிரத்து 167 புலிகள் உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். 2018-ம் ஆண்டு 2 ஆயிரத்து 967 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டு 3 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் உள்ள புலிகளை பாதுகாக்க 1973-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு 'புலிகள் திட்டத்தை' (Project Tiger) தொடங்கியது. அப்போது முதல் புலிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையின் பலனாக இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story