இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் : பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்


இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் :  பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 11 Jan 2024 5:33 PM GMT (Updated: 12 Jan 2024 1:20 AM GMT)

2016 டிசம்பரில் இந்தப் பாலத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

புதுடெல்லி,

மராட்டியத்தில் ரூ17,840 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான "அடல் பாலம்" நாளை பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இது குறித்து மத்திய அரசு தரப்பில் கூறியுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடி நாளை மராட்டிய செல்கிறார். மதியம் 12.15 மணியளவில் நாசிக் செல்லும் பிரதமர் அங்கு 27-வது தேசிய இளைஞர் விழாவைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில், மும்பையில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலத்தைப் பிரதமர் திறந்து வைத்து அதில் பயணம் செய்கிறார்.

மாலை 4.15 மணியளவில் நவி மும்பையில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மக்களின் 'போக்குவரத்தை எளிதாக்குவது' பிரதமரின் தொலை நோக்குப் பார்வையாகும். இதற்கேற்ப, இப்போது 'அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலம்' என்று பெயரிடப்பட்ட மும்பை டிரான்ஸ்ஹார்பர் இணைப்புப் பாலம் (துறைமுகங்களை இணைக்கும் பாலம்) கட்டப்பட்டுள்ளது. 2016 டிசம்பரில் இந்தப் பாலத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாகும், இது கடலில் சுமார் 16.5 கி.மீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கி.மீ நீளமும் கொண்டது. இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும். இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். மேலும் மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும். இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.


Next Story