'பிரிக்ஸ்' மாநாட்டில் சீன அதிபருடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி


பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபருடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி
x

தென்ஆப்பிரிக்காவில் நடந்த ‘பிரிக்ஸ்’ நாட்டில் இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கலந்து கொண்டனர்.

ஜோகன்னஸ்பர்க்,

இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக எல்லை தகராறு நிலவி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம், கிழக்கு லடாக்கில் சீன படைகள் அத்துமீறி நுழைந்ததால், இரு தரப்புக்கிடையே மோதல் நடந்தது. 3 ஆண்டுகளாக சில பகுதிகளில் படைகள் வாபஸ் பெறப்படாமல், இரு நாட்டு படைகளும் எதிரும், புதிருமாக நிற்கின்றன.

இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் நடந்த 'பிரிக்ஸ்' நாட்டில் இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் சந்தித்து பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு, மாநாட்டுக்கு முன்பிருந்தே இருந்து வந்தது.

இந்த பின்னணியில், மாநாட்டின் நிறைவில், தலைவர்கள் கூட்டாக பேட்டி அளிக்க வந்தபோது, நேருக்குநேர் சந்தித்துக் கொண்ட பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் கைகுலுக்கிக் கொண்டனர். வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி, தென்ஆப்பிரிக்க டெலிவிஷன் ஒளிபரப்பிய வீடியோ மூலம் தெரிய வந்தது. இருப்பினும், இதுதொடர்பாக இந்தியாவோ, சீனாவோ அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இதற்கிடையே ஜின்பிங்குடனான சந்திப்பின்போது லடாக் எல்லை விவகாரம் குறித்து பிரதமர் மோடி கவலை வெளியிட்டதாக வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா டெல்லியில் நேற்று தெரிவித்தார். இருநாட்டு உறவுகள் சீரடைய எல்லையில் அமைதியை பேண வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து எல்லையில் பதற்றத்தணிப்பு மற்றும் படை விலக்கல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தங்கள் அதிகாரிகளை அறிவுறுத்துவதாக இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.


Next Story