பொது இடங்களில் முகக்கவசம் அணிய பிரதமர் மோடி அறிவுரை


பொது இடங்களில் முகக்கவசம் அணிய பிரதமர் மோடி அறிவுரை
x

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான்.இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பிஎட்7 வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, மன்சூக் மாண்டவியா,சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தநிலையில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கூட்டம் மிகுந்த இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு மற்றும் விலையை தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.


Next Story