கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தி உள்ளோம் - பிரதமர் மோடி
இந்தியா ஊழலற்ற நாடாக தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது என மக்களவையில் பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மக்களவையில் பிரதமர் ஆற்றிய உரையில்,
பழங்குடியின சமூகத்தின் பெருமையை ஜனாதிபதி திரௌபதி முர்மு உயர்த்தியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதியால் இன்று பழங்குடியின சமூகத்தின் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக அவருக்கு இந்த நாடும், மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனாதிபதி தனது தொலைநோக்கு உரையின்மூலம் எங்களையும் கோடானுகோடி மக்களையும் வழிநடத்துகிறார். ஜனாதிபதி அவர் பதவி வகிப்பது, வரலாற்றுச் சிறப்பு மிக்கது மற்றும் நம் நாட்டின் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. 140 கோடி மக்களும் ஜனாதிபதி உரையை ஏற்றுக் கொண்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவமானப்படுத்தினார்.
காங்கிரஸ் கட்சியினர் செய்த வினைகள் அவர்களைக் சுடும். ஊடகங்களின் வெளிச்சம் பட வேண்டும் என்பதற்காக அவரவர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது. நாடு தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. இந்தியா உலகின் 5வது பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
வேலையிழப்பு, பொருளாதார பாதிப்பால் உலக நாடுகள் தள்ளாடும் நிலையில், அந்த பிரச்னையை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது.
உலகளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. கொரோனா காலத்தில் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பு இந்தியா சாதித்தது.
செல்போன் உற்பத்தி, எரிசக்தி துறை என ஒவ்வொரு துறையிலும் இந்தியா வரலாறு படைத்து வருகிறது. பல நெருக்கடிகளை மத்திய அரசு திறம்பட கையாண்டுள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்தவித தீவிரவாதமும் நடைபெறவில்லை. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி குறைந்துள்ளது. டிஜிட்டல் முறையில் பல லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெறுகிறது. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் காண்கின்றன. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தி உள்ளோம். உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது இந்தியா. பெருந்தொற்று போன்ற அனைத்தையும் தாண்டி நம் நாடு முன்னேறி வருகிறது. இந்தியா உற்பத்தி நாடாக மாறிக்கொண்டிருப்பதை உலகநாடுகள் வியந்து பார்த்து வருகின்றன.
இன்று ரெயில் நிலையங்களும் விமான நிலையங்களும் மாறி வருகின்றன. 70 ஆண்டுகளில் 70 விமான நிலையங்கள். 9 ஆண்டுகளில் 70 விமான நிலையங்கள். நாட்டில் நீர்வழிப் பாதைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அதிக ஆணவத்தில் தங்களுக்கு மட்டுமே அறிவு இருக்கிறது என்று நினைப்பவர்கள், மோடியை திட்டினால் தான் ஒரு வழி கிடைக்கும் என்று கருதி, பொய்யான, முட்டாள்தனமான அவதூறுகளை வீசி வருகிறார்கள்.
22 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர்களிடையே இந்த தவறான எண்ணம் உள்ளது.
என் மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச்செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் முகம் காடியதால் கிடைத்தது அல்ல, எனது நாட்டு மக்களுக்காக நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக எனது ஒவ்வொரு நொடியையும் எனது வாழ்வையும் அர்ப்பணித்துள்ளேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.