2 பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 11 இடங்களில் போலீசார் சோதனை; வெடிகுண்டு பயிற்சி பெற்ற இடத்துக்கு அழைத்து சென்றும் விசாரணை


2 பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 11 இடங்களில் போலீசார் சோதனை; வெடிகுண்டு பயிற்சி பெற்ற இடத்துக்கு அழைத்து சென்றும் விசாரணை
x
தினத்தந்தி 22 Sep 2022 7:00 PM GMT (Updated: 22 Sep 2022 7:00 PM GMT)

சிவமொக்காவில் கைதான 2 பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 11 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் அவர்களை வெடிகுண்டு பயிற்சி பெற்ற இடத்துக்கு அழைத்து சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சிவமொக்கா;

2 பயங்கரவாதிகள் கைது

சிவமொக்காவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த மாஷ் முனீர் அகமது, சிவமொக்காவை சேர்ந்த சையது யாசின் என்பது தெரியவந்தது.

மேலும் மற்றொரு பயங்கரவாதியான ஷாரிக் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.கைதான 2 பயங்கரவாதிகளையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.


வெடிகுண்டு பயிற்சி

இந்த நிலையில் போலீசார் நேற்று முன்தினம் கைதான 2 பயங்கரவாதிகளின் வீடுகள் மற்றும் அவர்கள் படித்த கல்லூரிகள் உள்பட 11 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அவர்கள் 2 பேரையும் அப்பலகெரே, சொம்புகுட்டே, பண்ட்வால் அருகே நாவூர், சிந்தானிகட்டே அக்ரஹாரா பகுதிகளுக்கும் அழைத்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

நாவூர், சிந்தானிகட்டே பகுதியில் அவர்கள் வெடிகுண்டு பயிற்சி பெற்றதாக தெரிகிறது. இதனால் அங்கு போலீஸ் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

கைதான பயங்கரவாதிகள், அந்தப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களை தேர்வு செய்து வெடிகுண்டு சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அடுத்தக்கட்ட விசாரணை

உதவி போலீஸ் சூப்பிரண்டு விக்ரம், தீர்த்தஹள்ளி துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தவீரய்யா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் கைதானவர்களிடம் இருந்து முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சையது யாசினின் செல்போன் மூலம் போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். அதன்மூலம் போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்கொணர்வு மனுதாக்கல்:

பயங்கரவாதியின் தந்தைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சிவமொக்காவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மங்களூருவை சேர்ந்த மாஷ் முனீர் அகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மாஷ் முனீர் அகமதுவின் தந்தை, முனீர் அகமது தனது மகனை காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் எனவும் கர்நாடக ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வீரப்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பயங்கரவாத வழக்கில் மாஷ் கைது செய்யப்பட்டது தெரிந்தும், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதாக கோபம் கொண்ட நீதிபதி வீரப்பா, மனுதாரரான முனீர் அகமதுவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


Next Story