தொழிலில் நஷ்டம்; தற்கொலை செய்யப்போவதாக கடலைமிட்டாய் வியாபாரி 'டுவிட்' - கவுன்சிலிங் கொடுத்த போலீசார்


தொழிலில் நஷ்டம்; தற்கொலை செய்யப்போவதாக கடலைமிட்டாய் வியாபாரி டுவிட் - கவுன்சிலிங் கொடுத்த போலீசார்
x

24 வயதான அந்த இளைஞர் ரெயிலில் கடலைமிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு 3 லட்ச ரூபாய் கடன் இருந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை சப் அர்பன் மாவட்டம் செம்பூரை சேர்ந்த 24 வயது இளைஞர் புறநகர் ரெயிலில் கடலைமிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவருக்கு 3 லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. தொழிலில் நஷ்டம், கடன் அதிகரிப்பால் அந்த வியாபாரி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனிடையே, கடன், தொழில் நஷ்டத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அந்த இளைஞர் தான் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வியாபாரியின் டுவிட் மும்பை போலீசாரின் பார்வைக்கு சென்ற நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அந்த வியாபாரி எங்கு உள்ளார் என்பது குறித்தும் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்கொலை செய்துகொள்ளப்போவதாக டுவிட்டரில் தெரிவித்த அந்த வியாபாரியை சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ராய்கண்ட் மாவட்டம் கர்ஜெட் நகரில் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், வியாபாரிக்கு தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடும்படி கவுன்சிலிங் வழங்கினர். கவுன்சிலிங்கிற்கு பின் வியாபாரி சகஜநிலைக்கு திரும்பியதால் அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.


Next Story