'வேலியே பயிரை மேய்ந்த கதை': திருட்டு வழக்குகளில் போலீஸ்காரர் கைது


வேலியே பயிரை மேய்ந்த கதை: திருட்டு வழக்குகளில் போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:47 PM GMT)

பெங்களூருவில் திருட்டு கும்பலுக்கு உதவியதுடன், திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

பெங்களூரு:

பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீசார் சமீபத்தில் வீடுகளில் திருடி வந்த கும்பலை கைது செய்தனர். சந்திரா லே-அவுட்டில் உள்ள வீடுகளில் நடந்த திருட்டு தொடர்பாக அவர்கள் கைதாகி இருந்தனர். விசாரணையில், சந்திரா லே-அவுட், சிக்கஜாலா, பனசங்கரி உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளில் அந்த கும்பலினர் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

அதே நேரத்தில் இந்த திருட்டு சம்பவங்களில் போலீஸ்காரர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் கவனத்திற்கு சந்திரா லே-அவுட் போலீசார் கொண்டு சென்றனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பனசங்கரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் எல்லப்பா என்பவருக்கு தான், அந்த கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் திருட்டு கும்பலுக்கு உதவியதுடன், திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரிந்தது. திருடர்களிடம் இருந்து தங்க நகைகளை பங்கிட்டும் வந்துள்ளார்.

இதையடுத்து, சந்திரா லே-அவுட் போலீசார் எல்லப்பாவை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து தங்க நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருட்டு கும்பலுடன் அவருக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது உள்ளிட்டவை குறித்து போலீஸ்காரர் எல்லப்பாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கைதான போலீஸ்காரர் எல்லப்பாவை பணியிடை நீக்கம் செய்து துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் எல்லப்பா மீது துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியே போலீஸ்காரரே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story