காஷ்மீர் பண்டிட் சுட்டுக்கொலை - தலைவர்கள் கண்டனம்


காஷ்மீர் பண்டிட் சுட்டுக்கொலை - தலைவர்கள் கண்டனம்
x

புல்வாமா மாவட்டத்தில் ஏ.டி.எம். காவலாளியாக பணியாற்றி வந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினர், வெளிமாநில தொழிலாளர்கள் ஆகியோரை குறிவைத்து பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில், பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நேற்று சுட்டுக் கொன்றனர். புல்வாமா மாவட்டம் அச்சன் பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பயங்கரவாதிகள் மிக அருகில் இருந்தபடி அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். நெஞ்சில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஏ.டி.எம். காவலாளி

அவர் பெயர் சஞ்சய் சர்மா (வயது 40) என்று தெரிய வந்தது. அதே அச்சன் பகுதியை சேர்ந்தவர். காஷ்மீர் பண்டிட்டான அவர், ஒரு வங்கியின் ஏ.டி.எம். காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இருப்பினும், பண்டிட் சமூகத்தினர் குறிவைத்து தாக்கப்பட்டு வந்ததால், அவர் சிறிது காலமாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

அவரது கொலைச்செய்தி அறிந்து, அச்சன் கிராமத்தில் சோகம் நிலவியது. ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டனர்.

உமர், மெகபூபா முப்தி

இதற்கிடையே, சஞ்சய் சர்மா கொலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் இயல்புநிலை திரும்பி விட்டதாக சித்தரித்துக்கொண்டு, பண்டிட் சமூகத்தினரை பாதுகாக்க தவறி விட்டதாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி மத்திய அரசு மீது குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story