அரசியல் ஒலிபெருக்கி


இடஒதுக்கீடு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு அநியாயம்

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு இருந்த இடஒதுக்கீடுவை ஆளும் பா.ஜனதா அரசு ரத்து செய்திருக்கிறது. இது முஸ்லிம் சமுதாய மக்களுக்கு பா.ஜனதா அரசு செய்த அநியாயம் ஆகும். பா.ஜனதா எப்போதும் பழிவாங்கும் அரசியலிலேயே ஈடுபட்டு வருகிறது. தங்களை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் ஒடுக்கி வருகிறது. தற்போது இடஒதுக்கீடு விவகாரத்தில் முஸ்லிம் சமுதாய மக்களை இந்த அரசு பழி தீர்த்துள்ளது.

- டி.கே.சிவக்குமார், கர்நாடக காங்கிரஸ் தலைவர்.

ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் ரகசிய கூட்டணி இல்லை

பா.ஜனதா எந்த கட்சியுடனும் ரகசிய கூட்டணி அமைத்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கடந்த தேர்தலில் பா.ஜனதா ரகசிய கூட்டணி அமைத்திருந்ததாக பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறார். அவ்வாறு கூட்டணி அமைத்திருந்தால், பாதாமி தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட்ட நான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த தொகுதியில் சித்தராமையா எப்படி வெற்றி பெற்றார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

- ஸ்ரீராமுலு, போக்குவரத்து துறை மந்திரி.

அனைத்து சமுதாயத்திற்கும் நியாயம் கிடைத்துள்ளது

கர்நாடகத்தில் வீரசைவ லிங்காயத், ஒக்கலிகர், எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ஜனதா அரசால் நியாயம் கிடைத்துள்ளது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ், முஸ்லிம் சமுதாய வாக்குகளை பெறுவதற்காக இடஒதுக்கீடு வழங்கி இருந்தது. சமுதாயங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் ரத்தத்தில் ஊறிபபோய் இருக்கிறது. அவர்களது குணமும் அதுதான்.

-ஷோபா, மத்திய வேளாண் மந்திரி.

பா.ஜனதா 300 சதவீத ஊழல் அரசு

பிரதமர் மோடியின் கர்நாடக சுற்றுப்பயணத்தின் மூலமாக பா.ஜனதாவினர் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊழல் 40 சதவீதம் இல்லை, 300 சதவீதம் ஆகும். ஏனெனில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பேகவுடா சிலையை நிறுவ ரூ.59 கோடி தான் செலவாகி இருந்தது. அந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு மட்டும் ரூ.30 கோடியை அரசு செலவு செய்துள்ளது. இதன் மூலம் பா.ஜனதா அரசு 300 சதவீத ஊழலில் ஈடுபடுவது தெளிவாகி இருக்கிறது.

-டி.கே.சுரேஷ், காங்கிரஸ் எம்.பி.

வருணாவில் என்னை தோற்கடிக்க உள்ஒப்பந்தம்

கடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் உள்ஒப்பந்தம் செய்து கொண்டு கூட்டணி அமைத்து, அந்த தொகுதியில் என்னை தோற்கடித்து இருந்தனர். தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியிலும் என்னை தோற்கடிக்க பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் உள்ஒப்பந்தம் செய்து கூட்டணி அமைத்துள்ளனர். என்னை தோற்கடிக்க யாராலும் முடியாது.

- சித்தராமையா,

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்.


Next Story