'அரசியல் எனக்கானது அல்ல..' திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மிமி சக்ரவர்த்தி ராஜினாமா செய்ய முடிவு
அரசியல் என்பது தனக்கானது அல்ல என்பதை இத்தனை ஆண்டுகளில் புரிந்துகொண்டதாக மிமி சக்ரவர்த்தி தெரிவித்தார்.
கொல்கத்தா,
பிரபல வங்காள நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஜாதவ்பூர் தொகுதி எம்.பி.யுமான மிமி சக்ரவர்த்தி, இன்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக மம்தா பானர்ஜியிடம் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மிமி சக்ரவர்த்தி, "இன்று நான் எங்கள் கட்சியின் தலைவரை சந்தித்து பேசினேன். எனது ராஜினாமா கடிதத்தை கடந்த 13-ந்தேதி நான் சமர்ப்பித்திருந்தேன். அரசியல் என்பது எனக்கானது அல்ல என்பதை இத்தனை ஆண்டுகளில் நான் புரிந்துகொண்டேன்" என்று தெரிவித்தார்.
மேலும் ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் வழங்காமல் மம்தா பானர்ஜியிடம் கொடுத்தது ஏன்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து எனக்கு ஒப்புதல் கிடைத்த பின்னர், எனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பேன்" என்றார்.