மக்களுக்கு ஆறுதல் அளித்த மழை.. டெல்லியில் காற்று மாசு, புகை மூட்டம் சற்று தணிந்தது


மக்களுக்கு ஆறுதல் அளித்த மழை.. டெல்லியில் காற்று மாசு, புகை மூட்டம் சற்று தணிந்தது
x

அண்டை மாநிலங்களில், அறுவடைக்கு பின் விவசாய கழிவுகள் (தாளடி) எரிக்கப்படும்போது வெளியாகும் புகை டெல்லிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு அதிகரித்தது. மாசுபட்ட காற்றுடன் அடர்ந்த பனிமூட்டமும் சேர்ந்ததால் டெல்லி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். வாகன பெருக்கத்தால் ஏற்படும் புகை மாசு மட்டுமின்றி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில், அறுவடைக்கு பின் விவசாய கழிவுகள் (தாளடி) எரிக்கப்படும்போது வெளியாகும் புகையும் டெல்லிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

மாசுபட்ட காற்று மற்றும் புகைமூட்டத்தை தணிக்கும் வகையில் நகரின் பல்வேறு இடங்களில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. செயற்கை மழை பெய்ய வைப்பது தொடர்பாக மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக காற்று மாசு மற்றும் புகை மூட்டம் சற்று தணிந்துள்ளது. மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் படிப்படியாக காற்றின் தரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல வாரங்களுக்குப் பிறகு டெல்லி மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். டெல்லியில் இன்று காற்றின் தரம் 407 என்ற அளவில் இருந்தது.

இதற்கிடையே காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. காற்று மாசு விஷயத்தில் ஒவ்வொரு தடவையும் அரசியல் போர் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் ஏற்கனவே கூறியது. டெல்லியின் அண்டை மாநிலங்களில் வைக்கோல், கோதுமை, கரும்பு தோகை உள்ளிட்ட பயிர் கழிவுகள் எரிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும், இதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள நடைமுறைகள் குறித்து நீதிமன்றம் இன்று ஆய்வு செய்யும். சாலை போக்குவரத்து விதிகளை மேலும் கடுமையாக்குவது மற்றும் கட்டுமான பகுதிகளில் இருந்து எழும் தூசி குறித்தும் நீதிமன்றம் இன்று பரிசீலிக்க உள்ளது.

டெல்லியில் தற்போதுள்ள மோசமான நிலையை சரிசெய்ய வேண்டுமானால் டெல்லியில் பரவலாக கனமழை பெய்ய வேண்டும். மிதமான மழை நிலைமையை மோசமாக்கும் என்று மத்திய அரசின் காற்று தர கண்காணிப்பு நிறுவன இயக்குனர் குஃப்ரான் பெய்க் கூறியுள்ளார்.

தற்போதுள்ள காற்றோட்டமானது, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் எரியும் பயிர் கழிவுகளிலிருந்து வெளியாகும் புகையை டெல்லிக்கு கொண்டு வருகிறது. ஏற்கனவெ டெல்லியில் உள்ள மாசுவுடன் இந்த புகையும் இணைவதால் நிலைமை மோசமாகிறது என்றும் குஃப்ரான் பெய்க் தெரிவித்தார்.


Next Story