உப்பள்ளியில் பொங்கல் திருவிழா தமிழ் கானா பாட்டு கச்சேரியுடன் நிறைவு
உப்பள்ளியில் பொங்கல் திருவிழாவையொட்டி தமிழ் கானா பாட்டு கச்சேரியுடன் விழா நிறைவடைந்தது.
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் சங்கர்ராவ் சால் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளாக 500-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தினர் சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான பொங்கல் திருவிழா நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இறுதி நாள் நிகழ்ச்சியாக தமிழ் கானா பாட்டு கச்சேரி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி மற்றும் வலைத்தள பிரபலமான ''கானா சுதாகர்'' கலந்து கொண்டு கச்சேரியை நடத்தினார்.
இந்த தமிழ் கானா பாட்டு கச்சேரி நிகழ்ச்சியை ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பின்னர் அதே மேடையில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பரிசு பொருட்களை காங்கிரஸ் பிரமுகர் கிராந்தி கிரண் வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.