மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த பிஎப்ஐ வன்முறை செயல்கள் ஈடுபடுகிறது - என்.ஐ.ஏ. தகவல்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சார்ந்த 93 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
புதுடெல்லி,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய மத அமைப்பு கேரளாவில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையிடம் டெல்லியில் உள்ளது.
இதனிடையே, நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது எழுந்தன.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
குறிப்பாக, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள், 2020-ம் ஆண்டு டெல்லி கலவரம், ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலைக்கு எதிரான போராட்டங்கள் மேலும் பல சம்பவங்களுக்கு இந்த அமைப்பு நிதிஉதவி அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
மத்திய ரிசர்வ் போலீஸ், மாநில போலீசார் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா உள்பட நாட்டின் 15 மாநிலங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள், பணம், சர்ச்சைக்குரிய ஆவணங்கள், செல்போன்கள், லேப்டாப்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பல்வேறு அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பான இடங்களில் நடந்த சோதனை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிற மதம் சார்ந்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களை கொலை செய்தல், கல்லூரி பேராசிரியரின் கையை வெட்டியது போன்ற வன்முறை செயல்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஈடுபட்டுள்ளது. பிரபலமான நபர்கள், இடங்கள் மீது தாக்குதல் நடந்துவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஐ.எஸ். பயங்கரவாதத்திற்கு ஆதரவு, பொதுச்சொத்தை அழித்தல் போன்றவை பயங்கரவாத தாக்குதல் மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்க இந்த அமைப்பால் முயற்சிக்கப்பட்டுள்ளது' என என்.ஐ.ஏ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.