தபால் துறை தள்ளாடுகிறதா?


தபால் துறை தள்ளாடுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு:

உடல் எங்கும் ஓடுகின்ற ரத்த நாளங்கள் போல், உலகு எங்கும் ஓடிக்கொண்டு இருப்பது, தபால்துறை. அதன் கையில் ஒரு கடிதத்தை ஒப்படைத்துவிட்டால் குறைந்தது 4 நாட்களில் உலகின் எந்த திசையாக இருந்தாலும் ஓடோடிப்போய்ச் சேர்த்துவிடும். அத்தகைய நம்பகத்தன்மை கொண்டது.

தபால்காரர் ஒரு பழைய சைக்கிளை உருட்டிக்கொண்டு கிராமத்து தெருக்களில் வருவார். சில காகிதங்களை கையிலும் பையிலும் வைத்திருப்பார். அவருக்குத்தான் எத்தனை மரியாதை?.

கடிதாசிகள்

அன்புள்ள அம்மா, அப்பா நலம் நலமறிய அவா... என்று பிழைப்பு தேடி நகரங்களுக்கு சென்ற பெற்ற பிள்ளைகள் எழுதிய கடிதாசிகள். அதற்காக நாளும் காத்துக்கிடந்த பெற்றோர்கள்.

அன்பு மனைவிக்கு ஆசையுடன் அத்தான் எழுதிக்கொள்வது என்னவென்றால்... என்று எல்லையில் காவல்புரியும் ராணுவ வீரர்கள், ஏக்கங்கொண்ட மனைவியர்களுக்கு எழுதிய மடல்கள்.

அன்புள்ள மான்விழியே... என்று காதலர்கள் வரையும் காதல் கடிதங்களுக்காக காத்திருந்த காதலிகள். அவர்களின் பதில்களை எதிர்நோக்கி பார்த்திருந்த காதலர்கள்.

இப்படி காத்து இருப்பவர்கள் எல்லாம் அந்த பழைய சைக்கிள்காரரைத்தான் தேடி எதிர்பார்த்து இருப்பார்கள்.

அவர் கொண்டுவருவது மகிழ்ச்சியான செய்தியாகவும் இருக்கலாம், சிலநேரங்களில் அதிர்ச்சியான (டெலகிராம்) தகவலாகவும் இருக்கலாம்.

தலைகீழ் மாற்றம்

இப்போது நிலை தலைகீழாகிவிட்டது.

வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்கள் சைக்கிள் இல்லாத தபால்காரர்களாக செயல்பட்டு வருகின்றன.

முன்பு எல்லாம் விழாக்காலங்களில் தபால் பெட்டிகள் வயிறு நிரம்பி, வாய்வழியே வாழ்த்து கடிதங்கள் எட்டிப்பார்க்கும். இப்போது திறந்துபார்த்தால் வறியவர் வயிறு போல் வற்றிப்போய் ஒன்று இரண்டு கடிதங்களே உள்ளே கிடக்கின்றன.

தனியார் 'கூரியர்' நிறுவனங்கள் தபால்துறைக்கு சவாலாக வளர்ந்துவிட்டன.

இந்த போட்டிகளில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள, தபால் துறையும் தன்னை உருமாற்றிக்கொண்டு வருகிறது. அது எப்படி? என்பதை பார்ப்போம்.

25 ஆயிரம் தபால் நிலையங்கள்

தபால் துறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அத்துறையில் பணியாற்றி வரும் அதிகாரி பிரபுகுமார் கூறியதாவது:-

கர்நாடகத்தில் சுமார் 25 ஆயிரம் தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. முன்பு மணிஆர்டர் மூலம் தான் மக்கள் பணத்தை அனுப்பினர். இதை தவிர வேறு வழி இல்லாத நிலை இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 'மணிஆர்டர்' முறையிலான பண பரிமாற்ற நடவடிக்கை பெரும்பாலும் குறைந்துவிட்டது. கிராமங்களில் உள்ளவர்களுக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அரசின் திட்ட மானியங்கள் மற்றும் உதவித்தொகைகள் போன்றவை வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றன. அதனால் மணிஆர்டர் முறை தேவைப்படவில்லை.

ஆதார் பதிவு, திருத்தம் போன்ற பணிகளை செய்கிறோம். இணைய வழி மின்னஞ்சல், ஸ்மார்ட் போன் போன்ற போன்றவற்றின் வருகை காரணமாக கடித போக்குவரத்துகள் குறைந்துவிட்டன. அரசு பணிகள் தொடர்பான கடிதங்கள், ஆவணங்கள், பணி நியமன ஆணைகள் போன்றவை தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. அதே நேரத்தில் சிறிய அளவிலான சரக்குகள் அனுப்புவது, பொருட்களை அனுப்புவது அதிகரித்துள்ளது. தனியார் கூரியர் நிறுவனங்கள் தபால்-சரக்குகளை அனுப்புகின்றன. ஆனால் அந்த நிறுவனங்கள் நகரங்களில் மட்டுமே சேவையை வழங்குகின்றன. ஆனால் தபால் துறை மூலம் நாட்டின் எந்த மூலைக்கும், குக்கிராமத்திற்கும் சரக்குகளை, பொருட்களை அனுப்பி வைக்க முடியும்.

தரமான சேவைகள்

உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சேவை அளிக்கிறோம். தரமான சேவை வழங்கி வருகிறோம். அனைத்து நாடுகளுக்கும் தபால் மற்றும் சரக்குகளை அனுப்புகிறோம். தனியார் நிறுவனங்களை விட தபால் துறை கட்டணம் மிக குறைவாக உள்ளது. அதனால் பல தனியார் நிறுவன கூரியர் நிறுவனங்கள் வந்தாலும், இன்றும் தபால் துறை மீதான மக்களின் நம்பிக்கை குறையவில்லை.

நாங்கள் இப்போது வங்கி சேவைகளையும் வழங்குகிறோம். அதாவது சேமிப்பு கணக்கு தொடங்குகிறோம். அதில் வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். அட்டைகளை வழங்குகிறோம். அந்த சேமிப்பு கணக்கில் வைக்கப்படும் பணத்திற்கு 4 சதவீதம் வரை வட்டி வழங்குகிறோம். வேறு எந்த வங்கியும் இந்த அளவுக்கு வட்டி வழங்குவது இல்லை. சுகன்யா சம்ருத்தி (செல்வமகள்) சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான மக்கள் பெண் குழந்தைகளின் பெயரில் கணக்குகளை தொடங்கி பணத்தை சேமித்து வருகிறார்கள். இது தவிர இன்னும் ஏராளமான திட்டங்கள் தபால் துறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளன. நாங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய சேவைகளை தரமான வகையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.

இவ்வாறு பிரபுகுமார் கூறினார்.

உதவி கிடைக்காதது வருத்தம்

சிவமொக்கா டவுன் மார்க்கெட் தபால் நிலையத்தில் தபால்காரராக பணியாற்றி வரும் சித்தப்பா என்பவர் கூறியதாவது:-

நான், 50 ஆண்டுகளாக தபால் நிலையத்தில் பணியாற்றி வருகிறேன். தபால் மூலம் அனுப்பப்படும் கடிதங்கள் தற்போது குறைந்துவிட்டது. ஆனாலும் இன்றளவும் கோர்ட்டு சம்மன், கோர்ட்டு தொடர்பான ஆவணங்கள், அரசு சம்பந்தமான அறிக்கைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை விரைவுத்தபால்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் வியாபாரரீதியாக சிலர் பயன்படுத்திகின்றனர். தற்போது பரிமாண வளர்ச்சிகளை தபால்துறை கண்டுள்ளது. எங்களை போல் தனியார் கூரியர் நிறுவனங்கள் செயல்படுவது கிடையாது. நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டு மக்களின் வீட்டிற்கு சென்று தபால்களை கொடுத்து வருகிறோம். மேலும் எங்களைவிட தனியார் கூரியர் நிறுவனத்தில் சேவை கட்டணம் பல மடங்கு கூடுதலாகும். சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வெயில், மழையை பொருட்படுத்தாமல் சொந்த செலவில் வீடுகளுக்கு சென்று மக்களிடம் தபால் கடிதத்தை கொடுக்கிறோம். ஆனால் எங்களுக்கு ஊக்கத்தொகையோ, கடன் உதவியோ கிடைக்காதது வருத்தமளிக்கிறது என்றார்.

வாழ்த்து அட்டைகளை அனுப்புவது குறைந்துள்ளது

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஜெயப்புராவில் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை செய்யும் நித்யா கூறுகையில், "இந்திய தபால் துறைக்கு தனிச்சிறப்பு உள்ளது. முன்பு மணியார்டர், விதவைப்பெண்களுக்கு மாத பென்சன் ஆகியவை நேரில் கொண்டு சென்று வழங்கப்பட்டது. தற்போது அவர்களுடையே வங்கி கணக்கில் செலுத்தும் நடைமுறை உள்ளது.

கிராமங்களில் மணியார்டர் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. செல்வமகள் திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் என்பதால், மக்கள் அந்த திட்டத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி வருகிறார்கள். குறிப்பாக தனியார் கூரியர் நிறுவனங்களை விட தபால் துறை மூலம் குறைந்த தொகையில் பார்சல்கள் அனுப்ப முடியும். பண்டிகை கால வாழ்த்து அட்டைகள் அனுப்புவது குறைந்துள்ளது. மற்றப்படி தபால்துறை சேவை தொடர்ந்து வருகிறது" என்றார்.

செல்வமகள் திட்டம், சேமிக்க நல்ல வழி

பெங்களூரு சி.வி.ராமன்நகரை சேர்ந்த ராபர்ட் என்பவர் கூறுகையில், "நாங்கள் இப்போது செல்போன், மின்னஞ்சல் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். அதனால் கடிதங்கள் அனுப்புவது இல்லை. நினைத்தவர்களிடம் நேரடியாக பேச முடிவதால் கடிதம் தேவை இல்லையே. அதே நேரத்தில் சிறிய அளவிலான சரக்குகள் மற்றும் பொருட்களை அனுப்புவதற்கு தபால் துறையின் சேவையை பயன்படுத்துகிறோம். தனியார் கூரியர் நிறுவனங்கள் இருந்தாலும், தபால் துறையில் கட்டணம் குறைவாக உள்ளது.

சில நேரங்களில் கூரியர் நிறுவனங்களில் சரக்குகளை அனுப்பினாலும், தபால் துறையில் அனுப்பினால், அது நிச்சயம் இலக்கை அடையும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. தனியார் நிறுவனம் மூலம் அனுப்புவது சிறிது சந்தேகம் ஏற்படும். இது மட்டுமின்றி சுகன்யா சம்ருத்தி திட்டம் நல்ல திட்டம் ஆகும். அது பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு பணத்தை சேமிக்க நல்ல வழி ஆகும். அதற்கு வட்டியும் கூடுதலாக கிடைக்கிறது" என்றார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

மங்களூரு அருகே அம்மன்கட்டா பகுதியை சேர்ந்த துணிக்கடை நடத்தி வரும் ஆர்.குமரேசன், வங்கி சேவை பல கிராமங்களில் கூட இல்லை. ஆனால் தபால் அலுவலகம் இல்லாத கிராமங்கள் மிகக் குறைவு. இருப்பினும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தபால் துறையை நவீனப்படுத்த வேண்டும். அத்துடன் தபால் துறையில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி மக்களுக்கும் இன்னும் சரிவர தெரியவில்லை. அதுபற்றி அதிகாரிகள் முறையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் நல்லது. அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தபால்துறையின் திட்டங்களின் பயனாளிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

பெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்த வங்கி ஊழியரான புஷ்பா என்பவர் கூறுகையில், "இந்தியாவில் அனைத்து துறைகளும் கணினி மயமாகி வருவதால் தபால் துறை குறித்து யாருக்கும் தெரிவது இல்லை. அங்கிருக்கும் திட்டங்கள் குறித்து தெரிவதும் இல்லை. எனவே தபால் துறை குறித்து முதலில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அதில் மக்களுக்கு பயன்பெறும் திட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்துவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் ஊழியர்கள், தபால் நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவேண்டும். எனக்கு தெரிந்து தபால் நிலையத்தில் செல்வமகள் திட்டம் மட்டுமே அனைவரின் சிந்தனையில் உள்ளது. ஏனென்றால் அது பெண் குழந்தைகளுக்கான திட்டம். இதேபோல் ஆண் குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு பல திட்டங்கள் உள்ளது. இதை முறையாக எடுத்து கூறவோ, விழிப்புணர்வை ஏற்படுத்தவோ எந்த தபால் நிலையமும் முன் வருவது இல்லை. இதனால் தபால் நிலையத்தின் மீதான மோகம் மக்களுக்கு குறைந்துவிட்டது" என்றார்.

கோர்ட்டு ஆவணங்கள்

சிவமொக்காவை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வி.சம்பத் கூறுகையில், "முன்பு தபால் துறை தபால்கள், பதிவு தபால்கள் மணியார்டர், பண்டிகை காலங்களில் வாழ்த்து அட்டை அனுப்புவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. இந்த துறையில் இருந்து தனியாக டெலகிராம் அனுப்பும் சேவை தொடங்ககப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் கடித போக்குவரத்து குறைந்து போன பிறகும் வேறு வகையான துரித அஞ்சல் சேவை, பார்சல் சேவை, சிறு சேமிப்பு கணக்குகள், மின்னஞ்சல் பணப்பரிமாற்றம், வெளிநாட்டு வாழ் மக்கள் அனுப்பும் பணம் இங்குள்ள மக்களுக்கு பணம் எடுக்க உதவியாக தபால் நிலையங்கள் உள்ளன.

ஆர்.டி. அக்கவுண்ட்டுகள், பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதங்கள், தேசியக்கொடி விற்பனை என்று பல்வேறு வகையான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி தபால் துறை நல்ல நிலையில் இயங்குகின்றன என்று கூறினால் மிகையல்ல. தபால்நிலைய சிறு சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு வங்கிகளை விட கூடுதல் வட்டி கிடைக்கிறது. இன்றும் கோர்ட்டு வழங்கும் தீர்ப்பு மற்றும் சம்மன் நகல்கள் பதிவு தபாலில் தான் அனுப்பப்படுகிறது" என்றார்.

உணர்வுபூர்வமான பந்தம்

பெங்களூரு இந்திராநகரை சேர்ந்த பொன்செல்வன் கூறுகையில், "ஒரு காலக்கட்டத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கும், வெளியூர்களில் வசிப்போர் பெற்றோர்களுக்கு தகவல் வழங்கும் தெய்வமாக தபால் நிலையம் இருந்தது. ஒரு கடிதத்தை வாங்குவதற்காக மாதங்கள், வாரங்கள் என்று காத்திருப்பார்கள். சைக்கிள் மணி ஒலித்தாலே தபால்காரர் வந்துவிட்டார் என்று ஓடி வருவார்கள். தபாலில் எழுதி அனுப்பப்படும் வார்த்தைகள் வாரக்கணக்கில் வைத்து படிப்பார்கள். இதனால் மக்கள் மற்றும் தபால்துறை இடையே உணர்வுபூர்வமான பந்தம் இருந்தது. தற்போது செல்போனில் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல் ஆகியவை வந்துவிட்டதால் தபால்களை மக்கள் புறந்தள்ளிவிட்டனர். ஓய்வூதிய பணம் எடுப்பதற்கும், குழந்தைகளுக்கான சிறுசேமிப்பிற்கும் மட்டுேம தபால் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இதை மீண்டும் மக்களிடையே கொண்டு செல்லவேண்டும் என்றால் தபால் நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போதும் மீண்டும் தபால் நிலையம் புத்துயிர்பெறும் "என்றார்.

தபால் பெட்டி கதை

* 1653-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில்தான் முதல் முறையாக தெரு ஓரங்களில் தபால் பெட்டிகள் நிறுவப்பட்டன.

* 1800-ம் ஆண்டு தபால் பெட்டிகள் பச்சை நிறத்தில் இருந்தன. பின்னர் பளிச்சென்று தெரிவதற்காக சிவப்பு நிறத்தில் மாற்றப்பட்டன.

* 1856-ல் விக்டோரியா மகாராணியின் கிரீடம் போன்ற தோற்றத்தில் தபால் பெட்டி வடிவமைக்கப்பட்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

* 1857-ல் சுவரில் பதிக்கப்படும் வகையில் தபால் பெட்டி அறிமுகம் ஆனது.

* 1879-ல் உருளை வடிவத்தில் தபால் பெட்டிகள் வந்தன.

* டி.வி. வடிவிலான தபால் பெட்டிகளும், உருளை வடிவிலான தபால் பெட்டிகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

* தமிழ்நாட்டில் மொத்தம் 7 ஆயிரத்து 385 தபால் பெட்டிகள் இருக்கின்றன.கடந்த ஆண்டு 700 தபால் பெட்டிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டன.

* தமிழக தபால் துறையில் 44 ஆயிரத்து 123 பேர் பணி செய்கிறார்கள். அவர்களில் 7,970 பேர் பெண்கள்.

* தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்கள்:-

94 தலைமை தபால் நிலையங்கள். 2,052 துணை தபால் நிலையங்கள்.

2,096 துறை ரீதியான தபால் நிலையங்கள். 9,266 கிளை தபால் நிலையங்களும்

அவற்றில் அடங்கும்.


Next Story